அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்படும் புதிய X- முத்திரையின் மை அழிந்துவிடக்கூடியது என இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது எனத் தேர்தல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
அந்த X- முத்திரை குறியீடுகள் நிரந்தரமானவை என்றும் அந்த முத்திரையில் பயன்படுத்தப்படும் மையைத் தண்ணீராலோ தட்பவெப்ப நிலையாலோ அழிக்க முடியாது என்றும் அத்துறை கூறியது.
இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டில் குறியிடுவதற்காக மேம்படுத்தப்பட்ட X-முத்திரை அறிமுகப்படுத்தப்படுகிறது.
முன்பு பயன்படுத்திய முத்திரையைவிட இது அளவில் பெரியதாக இருக்கும் என்றும் மிகவும் தெளிவாக முத்திரையிடும் என்றும் அத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
வாக்காளர்கள் அந்த முத்திரையைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை எனவும் தங்கள் சொந்தப் பேனாக்களைக் கொண்டும் முத்திரையிடலாம் எனவும் அது சொன்னது.
மை ஏற்றப்பட்ட பேனாக்கள் அல்லது X-பேனாக்கள் 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதை ஒரு முத்திரையாகப் பயன்படுத்த வேண்டும். ஆனால் சில வாக்காளர்கள் X-பேனாவைக் கொண்டு வாக்காளர் சீட்டில் எழுத முயன்றனர். அதனால், சில வாக்குகள் அந்தத் தேர்தலில் செல்லாத வாக்குகள் ஆகின.
மேலும், 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்குச் சாவடிகளில் முத்திரையிடுவதற்காக வழங்கப்பட்ட மை ஏற்றப்பட்ட பேனாக்கள் சரியாக முத்திரையிடப்படவில்லை எனப் பொய்யான புகார்கள் வந்தன என்றும் அத்துறை தெரிவித்தது.

