எல்டர்ஃபன்ட்: $50 மி. வழங்குதொகையால் 8,000 பேர் பலனடைந்தனர்

எல்டர்ஃபன்ட்: $50 மி. வழங்குதொகையால் 8,000 பேர் பலனடைந்தனர்

படம்: ஐஸ்டோர்க்ஃபோட்டோ

04 Oct 2026 - 6:08 pm

2 mins read

நீண்டகாலப் பராமரிப்புத் தேவைகளைக் கொண்ட, குறைந்த வருமானம் ஈட்டும் கடும் உடற்குறையுள்ள ஏறத்தாழ 8,000 சிங்கப்பூரர்களுக்கு, அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்பு வலைத் திட்டமான எல்டர்ஃபன்ட் மூலம் இதுவரை கிட்டத்தட்ட $50 மில்லியன் வழங்கி உதவி செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் எல்டர்ஃபன்ட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன்கீழ் வழங்கப்படும் வழங்குதொகையும் பயனாளர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன.

திட்டத்தின் முதல் ஆண்டில் 777 பயனாளர்களுக்கு $1.3 மில்லியன் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இந்தத் தொகை $4.3 மில்லியனாக உயர்ந்ததோடு, பயனாளர்களின் எண்ணிக்கையும் 1,772ஆக அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து, 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், இத்தொகை முறையே $6.2 மில்லியன், $8.5 மில்லியன், $10.3 மில்லியன் எனத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.

இக்காலகட்டத்தில் பயனாளர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்குச் சராசரியாக 900 என அதிகரித்தது. 2025ஆம் ஆண்டில் 5,083 பயனாளர்களுக்கு $11.9 மில்லியன் வழங்கப்பட்ட வேளையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 4,836 பயனாளிகளுக்கு $6.4 மில்லியன் வழங்கப்பட்டது.

2026 ஜூன் 30 நிலவரப்படி, 7,973 பயனாளர்கள் எல்டர்ஃபண்ட் திட்டத்தின்கீழ் $48.9 மில்லியனுக்கும் அதிகமான வழங்குதொகையைப் பெற்று பயனடைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

எல்டர்ஃபண்ட் திட்டத்தின் புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

சாப்பிடுதல், ஆடை அணிதல், கழிவறையைப் பயன்படுத்துதல், நடப்பது அல்லது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது போன்ற அன்றாட அடிப்படைச் செயல்பாடுகள் ஆறில் குறைந்தது மூன்றைச் செய்வதற்கு மற்றவர்களின் முழுமையான உதவி தேவைப்படும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெறுகின்றனர்.

இதற்காக அவர்களது குடும்பத்ததின் தனிநபர் மாத வருமானம் $2,600க்கு மிகாமலும் அவர்களின் மெடிசேவ் கணக்கு இருப்பு $10,000க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

தகுதிபெறும் பயனாளர்களுக்கு அவர்களின் குடும்ப வருமானத்தின் அடிப்படையில், அவர்கள் தகுதிபெறும் காலம் வரை மாதம் $150 அல்லது $250 வழங்கப்படும். குடும்பத்தின் தனிநபர் வருமானம் $1,500க்கு மிகாமல் இருப்பவர்கள் $250 பெறுவர். குடும்பத்தின் தனிநபர் வருமானம் $1,500க்கும் அதிகமாக இருந்தால் $150 வழங்கப்படும். பயனாளர்களில் பெரும்பாலானோர் $250 வழங்குதொகையையே பெற்றுள்ளதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்