ஹாலந்து வில்லேஜ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 76 வயது முதியவர் உயிரிழந்தார்.
காமன்வெல்த் அவென்யூவை நோக்கிச் செல்லும் ஹாலந்து அவென்யூவில் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து காலை 6.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
அந்த விபத்து தொடர்பாக 74 வயது சிற்றுந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது. மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்குக் கவனக் குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்றது காவல்துறை.
பாதசாரியான முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விபத்து தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.
போக்குவரத்து மரணங்கள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டு காணாத உச்சத்தைத் தொட்டது.
உயிரிழப்பு ஏற்படுத்திய மூன்றில் ஒரு விபத்து வாகனங்களின் வேகம் காரணமாக நிகழ்ந்ததாக பிப்ரவரி மாதம் போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை குறிப்பிட்டது.