தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படிக்கட்டில் மாண்டுகிடந்த முதியவர் குழப்பநிலையில் இருந்திருக்கக்கூடும்: மரண விசாரணை அதிகாரி

2 mins read
4dc775eb-321f-4fe3-9c22-b0a9d0f4a716
சிங்போஸ்ட் நிலையத்தின் படிக்கட்டில் திரு சோ எங் தோங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. - படம்: திரு சோ எங் தோங்கின் குடும்பம்

சிங்போஸ்ட் நிலையத்தின் படிக்கட்டில் மாண்டுகிடந்த முதியவர் குழப்பநிலையில் இருந்திருக்கக்கூடும் என்று மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

78 வயது திரு சோ எங் தோங் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்படவில்லை என்று அவரது மகள் கூறியபோதிலும் இறப்பதற்கு முன்பு அவர் குழப்பநிலையில் இருந்ததைக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் காட்டுவதாக அரசு மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா கூறினார்.

திரு சோவின் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று காவல்துறையினர் முன்வைத்த கருத்துடன் அவர் உடன்பட்டார்.

திரு சோ 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணம் அடைந்தார்.

அவர் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அதிகாலை படிக்கட்டு இருக்கும் இடத்துக்கு நுழைந்ததைக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின.

ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று அவரது உடல் அங்கு கண்டெடுக்கப்பட்டது.

இதய நோயால் அவர் இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

திரு சோவின் உடலில் வெளிப்புற, உள்காயம் ஏதும் தென்படவில்லை என்று மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், படிக்கட்டு இருக்கும் இடத்துக்கும் இட்டுச் செல்லும் கதவு ஒரே திசையில் மட்டுமே பூட்டக்கூடியதாக இருந்தது என்றும் இது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விதிமுறைக்கு உட்பட்டதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தூக்கிக் தளங்களுக்கு அருகில் உள்ள படிக்கட்டுகளுக்கு இட்டுச் செல்லும் கதவுகள் ஒரே திசையில் பூட்டக்கூடியதாக இருக்கக்கூடாது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்து புலன்விசாரணை அதிகாரி ஓங் கோக் பிங் கூறினார்.

திரு சோ மாண்டுகிடந்த படிக்கட்டு மின்தூக்கித் தளத்துக்கு அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்