தவறுதலாக காரின் வேகத்தைக் கூட்டி நண்பர்கள் மரணத்துக்குக் காரணமான முதியவருக்கு $10,000 அபராதம்

தவறுதலாக காரின் வேகத்தைக் கூட்டி நண்பர்கள் மரணத்துக்குக் காரணமான முதியவருக்கு $10,000 அபராதம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Apr 2026 - 6:17 pm

2 mins read

காரின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் நிறுத்தவும் உதவும் ‘பிரேக்’ கருவிக்குப் பதில் வேகத்தைக் கூட்டும் ‘ஆக்சிலரேட்டர்’ கருவியை அழுத்தியதால் நண்பர்கள் இருவரின் மரணத்திற்குக்குக் காரணமான முதியவருக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது 50 ஆண்டுகால நண்பர்களின் மறைவுக்குக் காரணமான புவா சியூ டோங்கிற்கு வயது 86. உரிய கவனத்துடன் வாகனத்தைச் செலுத்தாததால் திரு இங் லியன் கியூ, 76, திரு ஷான் விங் சாய், 83, இருவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த குற்றத்தை புவா ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவருக்கு அதிகபட்சமாகப் பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், எட்டு ஆண்டுகளுக்கு புவா எந்தவித வாகனத்தையும் ஓட்டுகின்ற உரிமத்தையும் வைத்திருக்கவோ புதிதாகப் பெறவோ முடியாது.

2013ஆம் ஆண்டிலிருந்தே உணவு, மளிகைப் பொருள்கள் வாங்க புவா தன் நண்பர்களை ஜோகூர் பாருவிற்குத் தனது காரில் அழைத்துச்செல்வது வழக்கம்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி காலை 8 மணியளவில், தோ பாயோ லோரோங் 7ல் அமைந்துள்ள பலமாடி கார் நிறுத்துமிட நுழைவாயிலருகே புவா தன் நண்பர்கள்மீது தவறுதலாக காரை மோதிய சம்பவம் நடந்தது.

கார் நின்றதும் திரு இங் காரின் பின்பகுதியைத் திறக்க முயன்றார். அப்போது திரு சான் முன்பக்கப் பயணிகளுக்கான கதவைத் திறந்தார். அவ்வேளையில் கார் திடீரெனப் பின்னோக்கி நகரத் தொடங்கியது.

நண்பர்கள் இருவரும் காருக்கு மிக அருகில் இருப்பதைக் கண்ட புவா, காரை நிறுத்த முயன்றார். ஆனால், தவறுதலாக ‘பிரேக்’கிற்குப் பதிலாக ‘ஆக்சிலரேட்டரை’ அழுத்திவிட்டார். இதனால் கார் வேகமாகப் பின்னோக்கிச் சென்றதுடன் அவரது நண்பர்கள் இருவர் மீதும் மோதியது; தொடர்ந்து, அறிவிப்புப் பலகை ஒன்றின்மீதும் தூண்மீதும் மோதியது.

சம்பவத்தில் திரு இங்கும் திரு சானும் பலத்த காயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர்கள் உயிரிழந்தனர்.

விபத்துக்குப் பிறகு புவா மனஉளைச்சலுக்கு (PTSD) ஆளானதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், அவரது வயது மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்