வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்புகளில் ஒட்டப்பட்டுள்ள போட்டி நிறுவனங்களின் விளம்பரங்களைச் சேதப்படுத்திய குற்றத்திற்காகக் குத்தகையாளர் ஒருவருக்கு 10 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
‘டோங் ஷெங் இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரான 75 வயது லீ சாய் கூன், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
பொருள்களை வைப்பதற்கான உலோக அடுக்குகளை வடிவமைத்து நிறுவும் வர்த்தகத்தில் லீ ஈடுபட்டு வருகிறார்.
புதிய குடியிருப்புகளில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக குத்தகையாளர்களிடையே ஏற்படும் போட்டியே இத்தகைய செயல்களுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி அங் மோ கியோ ஸ்திரீட் 21ல் உள்ள ஒரு குடியிருப்பில் தமது போட்டியாளரின் ஆறு விளம்பரச் சுவரொட்டிகள்மீது லீ கறுப்பு வண்ணம் பூசியது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது.
காவல்துறை விசாரணை குறித்து அறிந்ததும், அவர் அதனை அழிக்க முயன்றுள்ளார். ஆனால், அது பலனளிக்கவில்லை.
பின்னர் அதே ஆண்டு ஆகஸ்டில், தோ பாயோ லோரோங் 1ல் உள்ள மின்தூக்கி ஒன்றில் இருந்த போட்டியாளர்களின் விளம்பரங்களை லீயும் அவரது மனைவியும் அகற்றினர்.
பின்னர், அந்த இடத்தில் தங்கள் சொந்தச் சுவரொட்டிகளை ஒட்டியதோடு, அவற்றை மற்றவர்கள் எளிதாக அகற்றிவிடக் கூடாது என்பதற்காக லீ அவற்றைக் கத்தியால் சேதப்படுத்தினார்.
குடியிருப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில், கடந்த ஜனவரியில் லீ கைது செய்யப்பட்டார். அவரது மனைவிக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
