விரைவுச்சாலையில் வழிகேட்ட முதியவர்

விரைவுச்சாலையில் வழிகேட்ட முதியவர்

1 mins read
33e6d988-36c8-456d-9e6e-0d8bfbb319a0
தீவு விரைவுச்சாலையின் நடுவே வெள்ளை நிற வேனை நிறுத்திவிட்டு, பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்த காரை நோக்கி அந்த முதியவர் நடந்தார். படம்: SG Road Vigilante/ஃபேஸ்புக் -

கடைத்தொகுதிகள், எம்ஆர்டி நிலையங்கள் போன்ற பொது இடங்களில் முதியவர்கள் மற்றவர்களிடம் வழிகேட்பது வழக்கமான ஒன்று.

ஆனால், விரைவுச்சாலையின் நடுவே நின்றுகொண்டு அவ்வழியாக சென்ற வாகனமோட்டிகளிடம் முதியவர் ஒருவர் வழிகேட்ட சம்பவம் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தீவு விரைவுச்சாலையின் நடுவே வெள்ளை நிற வேனை நிறுத்திவிட்டு, பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்த காரை நோக்கி அந்த முதியவர் நடப்பதை, SG Road Vigilante ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று காட்டியது.

அந்த முதியவர் அணுகுவதைக் கண்டு காரை நிறுத்திய ஓட்டுநர் ஒருவர், அவரிடம் வழி கூறுவதைக் காணொளியில் கேட்க முடிந்தது.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து கூறிய இணையவாசிகள், அந்த முதியவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர்.

அந்த முதியவர் ஒரு விநியோக ஓட்டுநர் எனத் தெரிவதாகச் சொன்ன சிலர், அவர் செல்ல வேண்டிய இடத்திற்கான வழி அவருக்குத் தெரியவில்லை என்றனர்.

விரைவுச்சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து வெளியேறி நடப்பது ஆபத்தானது.

அந்த முதியவரின் சூழ்நிலை பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு அதற்கான திட்டமிடுதல் அவசியம் என்று சிலர் கூறினர்.