அங் மோ கியோவில் இருக்கும் ‘ஹர்ஃபன்’ சிகையலங்கார நிலையத்திற்கு $8 கட்டணத்திற்கு முடிதிருத்தம் செய்ய முதியவர் ஒருவர் சென்றார். அவரிடம் முடி சிகிச்சை என்ற பெயரில் $1,000 அவர்கள் வசூலித்தனர்.
அச்சிகிச்சையை மேற்கொள்ள நிலையம் அவரிடம் ஒப்புதல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சம்பவம் தொடர்பான விவரங்களைப் புதன்கிழமை (ஜூன் 4) வெளியிட்ட சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம், அது எப்போது நடந்தது என்பதை வெளியிடவில்லை.
‘ஹர்ஃபன்’ சிகையலங்கார நிலைய ஊழியர்கள் நியாயமற்ற வர்த்தக முறையைப் பயன்படுத்தி மூத்தோரிடம் சில சிகிச்சைகளை விற்பனை செய்தது தொடர்பாகப் பல புகார்கள் வந்ததையடுத்து விசாரணை மேற்கொண்டதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடையில் மூத்தோரைக் குறிவைத்து இலவச அல்லது குறைந்த விலையில் முடிதிருத்தத்தை அறிவித்தது.
அதற்காக நிலையத்திற்கு வரும் மூத்தோரிடம் வேறு விலையுயர்ந்த சேவைகளைப் பரிந்துரைத்து அவர்களை ஊழியர்கள் தவறாக வழிநடத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.
நியாயமற்ற வர்த்தக முறையில் ஈடுபட்டதை ஒப்புகொண்ட அந்நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்பித்தரவும் முன்வந்தது. அவ்வகையில், பாதிக்கப்பட்டோருக்கு கிட்டத்தட்ட $12,500 நிறுவனம் தந்துவிட்டதாகக் கூறப்பட்டது.