சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் வர்த்தகப் பிரிவில் பயணம் செய்துகொண்டிருந்த மூதாட்டி ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து தமது ஆடைகளிலேயே மலம் கழித்தார்.
இதுகுறித்து மற்றவர்களுக்குத் தெரியவந்தால் அவமானமாகிவிடும் என்று அவர் கழிவறைக்கு வெளியே தவித்துக்கொண்டிருந்தபோது, விமானப் பணிப்பெண் ஒருவர் அவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.
சக்கரநாற்காலி பயன்படுத்தும் அந்த மூதாட்டி நடந்ததைப் பற்றி அந்த விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்தார்.
உடனே, காதும் காதும் வைத்தாற்போல, யாருக்கும் தெரியாமல் அந்த விமானப் பணிப்பெண் அந்த மூதாட்டிக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்து அவரது இருக்கையைச் சுத்தம் செய்தார்.
அதுமட்டுமல்லாது, மூதாட்டியின் ஆடையைக் கழுவி, அவரிடம் அதைக் கொடுத்தார்.
“பெண் என்கிற முறையில், அந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட மிக இக்கட்டான சூழ்நிலையை நான் நன்கு புரிந்துகொண்டேன். தமக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் தெரியாமல் இருக்க அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் விரும்புவது தெளிவாகத் தெரிந்தது. அவரது விருப்பத்துக்கு மதிப்பளித்து, அவரது கௌரவத்துக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்வதே முக்கியம்,” என்று பத்து ஆண்டுகளாக விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் திருவாட்டி லிப்பி லிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், 86 தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியால் உன்னத சேவை விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களின் 34 வயது திருவாட்டி லிம்மும் ஒருவர்.
விருது வழங்கும் விழா புதன்கிழமையன்று (அக்டோபர் 29) ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டல் சிங்கப்பூர் சவுத் பீச்சில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது விமானப் போக்குவரத்துத்துறை முடங்கியது.
அப்போது டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள நினைவிழப்பு நோய்ப் பிரிவில் பராமரிப்புத் தூதராக திருவாட்டி லிம் பணியாற்றினார்.
விமானத்தில் தம்மைத் தாமே அசுத்தப்படுத்திக்கொண்ட முதியவருக்கு நினைவிழப்பு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதாக அவர் கூறினார்.


