புறாக்களுக்கு உணவளிப்பதை நிறுத்துமாறு எச்சரிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து உணவளித்து வந்த 78 வயது மூதாட்டிக்கு புதன்கிழமை (செப்டம்பர் 30) S$9,200 அபராதம் விதிக்கப்பட்டது.
மனிதர்களைப் போலவே பறவைகளுக்கும் உணவு தேவை என்று கூறி தேசியப் பூங்காக் கழக அதிகாரியின் அறிவுறுத்தலை ஏற்க மூதாட்டி ரொகாயா அகமது மறுத்தார். மேலும், அதிகாரி ஒருவரையும் அவர் தாக்கினார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ரொகாயா ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக் 145 பகுதியில் ரொகாயா சிலமுறை புறாக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பப்பாளி, அரிசி உள்ளிட்ட உணவுகளைக் கொடுத்தார்.
அதைக் கண்ட அதிகாரிகள் பறவைகளுக்கு உணவளிப்பதை நிறுத்துமாறு மூதாட்டிக்கு அறிவுறுத்தினர். ஆனால், ரொகாயா அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உணவளித்தார்.
ஒருமுறை ரொகாயா அதிகாரியை வயிற்றுப் பகுதியிலும் தாக்கினார்.
இவ்வாண்டு ஜனவரி மாதமும் ரொகாயா புல்வெளியில் புறாக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் ரொட்டி, தானியங்களைத் தூவுவதைக் கண்டனர்.
அதன்பிறகு அவர்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
மறதிநோயால் பாதிக்கப்பட்ட ரொகாயாவிடம், இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று துணை முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
அபராதம் மட்டுமே விதிக்கக்கூடிய விதிவிலக்கான வழக்காக இதை அரசுத் தரப்பு கருதியதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
ரொகாயா அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தினார்.
வனவிலங்குகளுக்கு உணவளிப்போருக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் அதே தவற்றைச் செய்வோருக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் S$20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
