மத்திய சேமநிதிக் (மசேநிதி) கழகத்தால் நிர்வகிக்கப்படும் சிங்டெல் சலுகை விலைப் பங்குத் திட்டம் இந்த ஆண்டிறுதிக்குள் நிறுத்தப்படவுள்ளதை அறிந்த முதியவர்கள் சிலர், தங்களது பங்குகளை விற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏப்ரல் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, மே 7ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற இந்த நடவடிக்கை மூலம் 1993, 1996ஆம் ஆண்டுகளில் இப்பங்குகளை வாங்கிய சிங்கப்பூரர்கள் இனி அவற்றை நேரடியாகத் தங்கள் வசம் வைத்திருக்க முடியும்.
இதன்படி, பங்குதாரர்கள் தற்போது அந்தப் பங்குகளை முழுவதுமாக விற்றுப் பணமாக்கிக்கொள்ளலாம். அல்லது, 2026 நவம்பர் 21ஆம் தேதி இந்தப் பங்குகளை மத்திய சேமநிதிக் கழகத்திடமிருந்து தங்களது தனிப்பட்ட மத்திய டெபாசிட்டரி கணக்கிற்கு மாற்றிக்கொண்டு, பின்னர் விற்கலாம்.
ஐம்பதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஏறக்குறைய 615,000 மசேநிதி உறுப்பினர்கள் இந்தப் பங்குகளை வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சில முதியவர்கள், இந்தப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது விற்பதா என்ற குழப்பத்தில் தாங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் சிலர், பங்குகளை விற்கும் நடைமுறை தங்களுக்கு முழுமையாகப் புரியவில்லை என்று கூறினர்.
இந்நிலையில், மின்னிலக்கத் தொழில்நுட்பத்தில் போதிய அனுபவம் இல்லாத, கூடுதல் உதவி தேவைப்படக்கூடிய ஏறக்குறைய 20,000க்கும் மேற்பட்ட முதியவர்களைத் தொடர்புகொண்டு தான் உதவத் திட்டமிட்டுள்ளதாக சிங்டெல் தெரிவித்துள்ளது.

