வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மூத்தோரை ஒன்றிணைக்கும் வகையில் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ஹார்ட்ஸ்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்ஜி60 கொண்டாட்டத்தையும், புத்தாண்டுக் கொண்டாட்டத்தையும் இணைக்கும் வகையில் அது இடம்பெற்றது.
‘புராஜெக்ட் ஸ்மைல்’, சிறுநீரக நோயாளிகளுக்கான முஸ்லிம் சங்கம், ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மூத்தோர் கிட்டத்தட்ட 200 பேர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத் தன்மையைப் பிரதிபலிப்பதாகவும், முதியவர்களின் மன, சமூக நல்வாழ்வை ஆதரிக்கும் சமூகத் தலைமையிலான அணுகுமுறையாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
அங்கீகாரம் பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்பான ‘புராஜெக்ட் ஸ்மைல்’ இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
சனிக்கிழமை (ஜனவரி 17) சாங்கி விமான நிலைய கிரௌன் பிளாசா வளாகத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது.
ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிசால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரின் எஸ்ஜி60 மைல்கல் கொண்டாட்டத்தின் நிறைவுக்கட்ட அங்கமாகத் திகழும் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ஹார்ட்ஸ்’ மூத்த குடிமக்களின் வாழ்வியல் அனுபவங்கள், அவர்களின் தொடர் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதோடு சமூகப் பிணைப்புடன் கூடிய முதுமையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு சுறுசுறுப்பான முதுமையை ஆதரித்து வந்தாலும் மன, சமூக நல்வாழ்வு என்பது முதுமைப் பருவத்தின் மிக முக்கியமான, அதிகம் கவனிக்கப்படாத ஓர் அங்கமாகவே உள்ளது.
பிற வகைகளில் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தாலும்கூட சமூகத் தனிமை, வலுவிழந்த சமூகப் பிணைப்புகள் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கக்கூடும்.
ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகாரம், சமூகப் பிணைப்பிற்கான ஒரு பொதுவான களத்தை உருவாக்கும் நோக்கில் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ஹார்ட்ஸ்’ செயல்படுகிறது.
இது முதியவர்களை வெறும் பயனாளர்களாகக் கருதாமல் பரந்த சமூகத்தின் மதிப்புமிக்க பங்கேற்பாளர்களாகவும் ஒன்றிணைத்தது.
முதுமைக்கால மாற்றங்கள் குறிப்பாகப் பணி ஓய்வு பெறுதல், முதியவர்களின் வாழ்க்கை நோக்கம் மீதும், அதைச் சார்ந்திருக்கும் உணர்வின் மீதும் நுட்பமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
‘புராஜெக்ட் ஸ்மைல்’ திட்டங்கள் முதியவர்களைப் பழக்கமான சூழல்களில் ஈடுபடுத்துவதால் உறவுகள் இயல்பாக வளரவும், அவர்களின் மனரீதியான தேவைகள் கண்ணியத்துடன் அங்கீகரிக்கப்படவும் இது வழியமைக்கிறது.
திருவாட்டி நாகம்மை சாத்தப்பன், 79, ஈராண்டுகளுக்கு முன்னர் ‘புராஜெக்ட் ஸ்மைல்’ மூத்தோர் திட்டத்தில் சேர்ந்தார்.
அனைத்து நடவடிக்கைகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கும் திருவாட்டி நாகம்மை, கலை, தையல் வகுப்புகளைப் பெரிதும் விரும்புவதோடு, தமிழ் பேசும் சமூகத்தினரிடையே வலுவான நட்புறவையும் வளர்த்துக் கொண்டுள்ளார்.
வாரத்தில் இரண்டு நாள்கள் இதற்காக நேரம் ஒதுக்கும் அவர் இதன் மூலம் மூப்படைவதையே தன்னால் உணர முடிவதில்லை என்றார்.
‘புராஜெக்ட் ஸ்மைல்’ ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான திருவாட்டி பார்வதி சங்கரலிங்கம், 50, முதியோர் நல்வாழ்வு, முதியோர் மேம்பாடு, தோழமை ஆகிய திட்டங்களில் அணுக்கமாகப் பணியாற்றுகிறார்.
முதியவர்கள் இத்திட்டங்களை எளிதில் அணுகுவதற்கும் அவற்றில் பங்கேற்பதற்கும் ஏதுவாகத் தனது தகவல் தொழில்நுட்பப் பின்னணியையும் தமிழ் மொழிப் புலமையையும் பயன்படுத்தி மொழிபெயர்ப்பு, மின்னிலக்க முயற்சிகளில் இவர் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

