ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (ஏஐசி) தலைமை நிர்வாக அதிகாரியான தினேஷ் வாசு தாஸ் அடுத்த சில நாள்களில் பதவி விலகி அரசியலில் நுழைவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூலம் அறியப்படுகிறது.
விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அண்மைய வாரங்களாக அரசியலில் நுழையும் நோக்கத்தோடு மூத்த பொதுச் சேவை ஊழியர்களில் சிலர் பதவி விலகி வருகின்றனர்.
அந்த வரிசையில் இவரது பதவி விலகலும் இடம்பெறுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து தினேஷ், 49, ஏஐசிக்கு தலைமைத் தாங்கி வருகிறார். ஆனால் 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில்தான் அவர் அதிகாரபூர்வமாக அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.
ஏஐசி எனும் அமைப்பு மூத்த ஊழியர்களுக்கான பராமரிப்புச் சேவைகளை ஒருங்கிணைத்து வருகிறது.
இவரது தலைமையின்கீழ் மூத்தோர் அதிகமானோர் தொண்டூழியத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் பல திட்டங்களை ஏஐசியில் அவர் அறிமுகப்படுத்தினார்.
அது மட்டுமல்லாமல் பிற சுகாதார முயற்சிகளுடன் ஹெல்தியர் எஸ்ஜி அமலாக்கத்திற்கும் ஆதரவளித்தார்.
ஏஐசியில் சேர்வதற்கு முன்பு தினேஷ், கொவிட்-19 காலத்தில் சுகாதார அமைச்சின் நெருக்கடி கால உத்தி மற்றும் செயலாக்கக் குழுவின் இயக்குநராக இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கிருமிக்கு எதிராக சிங்கப்பூரர்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சியிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.
இதற்காக, 2024ஆம் ஆண்டில் பொதுச் சேவை நட்சத்திர விருது(கொவிட்-19) அவருக்கு வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் கொள்ளைநோயை நிர்வகித்து, கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களை கௌரவிப்பதற்காக தேசிய அளவில் அந்த விருது உருவாக்கப்பட்டது.
2020ல் சுகாதார அமைச்சில் தினேஷ் இணைவதற்கு முன்பு சிங்கப்பூர் ஆயுதப் படையில் 25 ஆண்டுகள் பணியாற்றி பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார்.

