வாகனங்களில் வெற்றி, நன்றி கோரும் ஊர்வலங்களை நடத்த விண்ணப்பிக்கலாம்

1 mins read
0e19848d-9516-43dc-b221-29a45b30d202
வெற்றி, நன்றி கோரும் ஊர்வலங்களை நடத்தும் அனுமதி பெற $50 கட்டணம் செலுத்த வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தலுக்குப் பிறகு வாகனங்களில் சென்று வெற்றி ஊர்வலம் நடத்தவும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் தேர்தல் வேட்பாளர்களும் அவர்களது முகவர்களும் ஏப்ரல் 23லிருந்து மே 3 வரை விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வெற்றி, நன்றி கோரும் ஊர்வலங்களை தேர்தல் தினமான மே 3ஆம் தேதிக்குப் பிறகு, மே 4லிருந்து மே 10 வரை காலை 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடத்தலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வெற்றி, நன்றி கோரும் ஊர்வலங்களை நடத்தும் அனுமதி பெற $50 கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட காவல்துறை தலைமையகத்தில் வாரநாள்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

அனுமதிச் சீட்டு தயாரானதும் அதை விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்குச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.

விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் வாகன எண்ணிக்கையைவிட அதிகமான வாகனங்களை வெற்றி, நன்றி கோரும் ஊர்வலங்களில் பயன்படுத்தக்கூடாது.

விண்ணப்பதாரர் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

அவரால் கலந்துகொள்ள முடியாவிடில் தகுந்த காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட பயணப் பாதையில் மட்டுமே ஊர்வல வாகனங்கள் செல்ல வேண்டும்.

அனுமதி வழங்கும் காவல்துறை அதிகாரியின் ஒப்புதல் இன்றி ஊர்வலத்தின்போது பாட்டு பாடவோ, இசைக் கருவிகளை வாசிக்கவோ கூடாது.

அனுமதியின்றி பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவற்றை காட்சிக்கு வைக்கக்கூடாது.

குறிப்புச் சொற்கள்