செயற்கை நுண்ணறிவு, நீடித்த நிலைத்தன்மைமிக்க அம்சங்களுடன் இவ்வாண்டின் தேர்தல் தளவாடங்கள் இடம்பெறவுள்ளன.
‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ உருவாக்கிய ‘மாஜுலா’ செயலி முதன்முறையாகப் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளது.
‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம், இந்தப் பொதுத் தேர்தலில் உள்ள 1,240 உள்ளூர் வாக்களிப்பு நிலையங்களுக்குத் தேவையான குடைகள், பேனாக்கள், மின்விளக்குகள், சக்கர நாற்காலிகள் போன்ற முக்கியப் பொருள்களை விநியோகிக்கிறது. இச்செயல்முறையை ‘மாஜுலா’ செயலி சீராக்கும்.
செயற்கை நுண்ணறிவுமூலம் இச்செயலி மின்னிலக்க ஆவணங்களிலிருந்து முக்கிய விவரங்களைக் கண்டறிந்து வகைப்படுத்துகிறது. இதன்மூலம், தளவாடங்கள் தொடர்பான சரிபார்ப்புப் பட்டியல்கள், படிவங்கள் போன்ற தாள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க முடிகிறது.
2023 அதிபர் தேர்தலில் முதன்முதலில் அறிமுகமானபோது இச்செயலி 17,000க்கும் மேற்பட்ட தாள்களின் பயன்பாட்டை நீக்கியதாகக் கூறினார் ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ தலைமை நிர்வாகி லோகநாதன் ராமசாமி, 62.
“இச்செயலியை உருவாக்குவதற்கு முன் தொலைபேசி அழைப்பு நிலையத்தில் எங்களுக்கு 100 பேர் இருந்தனர். தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளிலிருந்து வரும் தகவல்களைக் கொண்டு வாக்களிப்பு நிலையங்களின் நிலவரங்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது,” என்றார் திரு லோகநாதன்.
ஆனால், இப்போது வாக்களிப்பு நிலைய நிலவரங்களைச் செயலியிலேயே உடனுக்குடன் காண முடிவதால் கிட்டத்தட்ட 20 பேர் மட்டுமே தொலைபேசி அழைப்பு நிலையத்தில் தேவைப்படுகின்றனர்.
இம்முறை, ஒருவரின் இருப்பிடத்தை நேரடியாகக் கண்காணிக்கும் (live geo-tracking) அம்சமும் செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏதேனும் வாக்களிப்பு நிலையத்தில் உதவி தேவைப்பட்டால் அதன் அருகிலிருக்கும் ஊழியர்கள் உடனே அங்கு செல்லலாம்.
தொடர்புடைய செய்திகள்
இச்செயலி மட்டுமன்றி பசுமைத் தளவாட அம்சத்தையும் எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொருள்களை விநியோகிக்கப் பயன்படும் கூண்டுகளில் நீடித்த நிலைத்தன்மை அம்சம் உட்புகுத்தப்பட்டுள்ளது. அட்டையால் செய்யப்பட்ட, மறுசுழற்சி செய்யத்தக்க இக்கூண்டுகளுக்கு ‘இகோ-கேஜ்’ என்று பெயர். அவற்றில் சக்கரங்கள் இருப்பதால் அவற்றை எளிதில் நகர்த்தவும் செய்யலாம்.
இதனால் ஒருமுறை பயன்படுத்தியபின் வீசி எறியக்கூடிய பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
“தீவு முழுவதும் எங்களுக்கு 1,600 கூண்டுகள் உள்ளன. அவை அனைத்தையும் மறுசுழற்சி செய்வதே எங்கள் திட்டம்,” என்றார் திரு லோகநாதன்.

