பொதுத் தேர்தல் முடிவுகள் தமக்கு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் லியோங் மன் வாய், அது கட்சிக்கு முடிவல்ல என்றார்.
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சியை அவர் வாழ்த்தினார்.
வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் தொகுதியில் போட்டியிட்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தகுதியான வேட்பாளர் என்றும் அவர் சொன்னார்.
புதன்கிழமை (மே 7) ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மே 3ஆம் தேதி நடந்த தேர்தலில் அதிர்ச்சியான முடிவுகளிலிருந்து மீள ஒரு சில நாள்கள் ஆனதாக அவர் கூறினார்.
“பொதுத் தேர்தல் 2025ன் முடிவுகள், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி எதிர்பார்த்தது அல்ல. ஆனால் மக்களின் முடிவை பணிவுடனும் மரியாதையுடனும் ஏற்றுக் கொள்கிறோம்,” என்று திரு லியோங் மன் வாய் குறிப்பிட்டிருந்தார்.
“வாக்குப்பெட்டி மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்படுகிறது. நாங்கள் கௌரவமாக மக்களின் குரலை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஏமாற்றமளிக்கும் முடிவு,” என்றார் அவர்.
பொதுத் தேர்தலின் முடிவுகள் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றியுள்ளது. லியோங்குக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உதவி தலைவர் ஹேசல் புவாவுக்கும் வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கட்சி, போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதி உட்பட அது மீண்டும் போட்டியிட்ட இடங்களிலும் ஓரளவு வாக்குகளையே அது கைப்பற்றியது.
ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மீண்டும் ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் உறுதியளித்திருந்தார்.

