பொதுத் தேர்தல் 2025ன் முடிவுகள் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அவர் இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூரிலும் உலகிலும் முக்கியமானதொரு காலகட்டத்தில் இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது என்றார் அவர்.
“பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தத் தேர்தலில் வலுவான ஆதரவைப் பெற்றது மிகவும் முக்கியமானது. ஒன்றுபட்ட ஒரு நாட்டின் முழு ஆதரவைத் தாம் பெற்றிருப்பதைச் சிங்கப்பூரர்களுக்கும் உலகிற்கும் அவர் எடுத்துக்கூற இது முக்கியம். இந்தத் தேர்தல் முடிவுகள் அதைக் காட்டுகின்றன,” என்றார் திரு லீ.
இக்கட்டான சூழல் நிலவுவதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் காட்டியுள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான சவால்களைக் கையாள அனைவரும் ஒன்றிணைய வேண்டியது முக்கியம் என்பதை நாம் அறிவோம் என்று கூறிய மூத்த அமைச்சர், “பிரதமருக்கும் அவரது நான்காம் தலைமுறைக் குழுவினருக்கும் சந்தேகத்துக்கிடமில்லாத ஆதரவை நாம் காட்டியுள்ளோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தத் தேர்தலின்போது இனம், சமயம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் தலைதூக்கின. சிங்கப்பூரர்கள் பல இன, பல கலாசார விழுமியங்களையும் நாட்டின் அடிப்படையான நெறிமுறைகளையும் ஏற்றுக்கொள்கின்றனர், ஆதரிக்கின்றனர் என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அரசாங்கம் உங்களுக்குச் சேவையாற்ற ஆன அனைத்தையும் செய்யும் என்று திரு லீ கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து சிங்கப்பூர் எவ்வாறு செயலாற்றும் என்பதை உலகிற்குக் காட்டவேண்டும் என்று கூறிய அவர், நமது முன்னோர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் நமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்குச் சரியானதைச் செய்யும்படியும் செயலாற்ற வேண்டும் என்று தம் பதிவில் கூறியுள்ளார்.