வரும் பொதுத் தேர்தலில் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் பலமுனைப் போட்டி ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.
தெம்பனிஸ் குழுத்தொகுதி 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போதுமுதல், 1997 தேர்தலைத் தவிர்த்து, எல்லாத் தேர்தல்களிலும் அங்கு இருமுனைப் போட்டியே இருந்து வந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அந்தக் குழுத்தொகுதியில் 147,900 வாக்காளர்களும் அதிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதியில் 23,800 வாக்காளர்களும் உள்ளனர்.
தேர்தல் எல்லைகள் மறுஆய்வுக்குழு மார்ச் 11ஆம் தேதி தொகுதிகளின் எல்லை மாற்றங்களை அறிவிப்பதற்கு முன்பே தெம்பனிஸ் குழுத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி இருக்கும் என்று பேசப்பட்டது.
மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான போட்டியாக அது இருக்கக்கூடும்.
எதிர்க்கட்சிகள் மூன்றும் தெம்பனிஸ் குழுத் தொகுதியிலும் தெம்பனிஸ் சங்காட் தனித் தொகுதியிலும் மசெகவுக்கு எதிராகப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020 பொதுத் தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிட்டது. தானும் அங்கு களத்தில் இறங்கப் போவதாக மக்கள் சக்திக் கட்சி இவ்வாண்டு பிப்ரவரி இறுதிவாக்கில் தெரிவித்தது.
இவை தவிர, பாட்டாளிக் கட்சியினர் அந்தத் தொகுதியில் கடந்த ஈராண்டுகளாக வலம் வந்தவண்ணம் உள்ளனர். ஐவர் கொண்ட குழுவை அந்தக் கட்சி அங்கு களமிறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தெம்பனிஸ் வட்டாரத்தில் 280,000க்கும் அதிகமானவர்கள் வசிக்கிறார்கள். சிங்கப்பூரின் மக்கள்தொகையில் அது 5 விழுக்காடு. அவர்களில் 170,000 பேர் பதிவுபெற்ற வாக்காளர்கள்.
தெம்பனிசில் வசிப்போரில், கிட்டத்தட்ட நால்வரில் ஒருவர் மலாய் இனத்தவர். மலாய் வாக்காளர்களை அதிகம் கொண்ட குழுத்தொகுதி அது.
தேசிய சராசரியைக் காட்டிலும் 10 விழுக்காடு, அதாவது 23.6 விழுக்காடு மலாய் மக்கள் அங்கு வசிப்பதாக புள்ளிவிவரத் துறையின் 2020 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
முதிர்ச்சியடைந்த நகராக தெம்பனிஸ் இருந்தபோதிலும், அண்மைய ஆண்டுகளாக இடம்பெற்று வரும் புதிய வீடமைப்புத் திட்டங்கள் காரணமாக அங்கு மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தெம்பனிஸ் நார்த் வட்டாரத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட தெம்பனிஸ் கிரீன்கோர்ட், கிரீன்டியூ, கிரீன்ஃபோலியேஜ் போன்ற பிடிஓ திட்டங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.