தாதிமை இல்லத்தில் வாக்களிக்கும் ஏற்பாடு கைவிடப்படுவதாக தேர்தல் துறை அறிவிப்பு

2 mins read
40bd91db-1f05-4fc8-85bd-fadf0bd2e5cd
2023 அதிபர் தேர்தலின்போது 31 தாதிமை இல்லங்களில் சிறப்பு வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இனிவரும் தேர்தல்களில் தாதிமை இல்லங்களில் வாக்களிக்கும் ஏற்பாடு கைவிடப்படும் என்று தேர்தல் துறை தெரிவித்து உள்ளது.

நடமாடச் சிரமப்படும் மூத்தோருக்கு உதவும் விதமாக, 2023 அதிபர் தேர்தலில் தாதிமை இல்லங்களில் தங்கி இருப்போர் வாக்களிக்க வசதி செய்து தரப்பட்டது.

தேர்தல் முடிந்த பின்னர் அந்த முன்னோடி ஏற்பாட்டை தேர்தல் துறை மறுஆய்வு செய்தது.

பொதுத் தேர்தலுக்கு அதுபோன்ற சிறப்பு ஏற்பாடு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை அப்போது அது கண்டறிந்தது.

எனவே, இனி நடைபெறும் தேர்தல்களில், தாதிமை இல்லவாசிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்கலாம் என்று தேர்தல் துறை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) கூறியது.

இங்குள்ள 31 தாதிமை இல்லங்களில் அதிபர் தேர்தலின்போது வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிங்கப்பூரில் அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது அதுவே முதல்முறை.

படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகளை தேர்தல் பணியாளர்கள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று தாதிமை இல்ல வாக்களிப்பு மையங்களில் அவர்களை வாக்களிக்கச் செய்தனர். அதன் மூலம் 4,087 வாக்குகள் பதிவாயின.

அந்த ஏற்பாடு பற்றி பின்னர் தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கருத்துரைத்தனர்.

ஏன் வாக்களிக்கிறோம் என்பதையும் தங்களது வாக்கிற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் பெரும்பாலான தாதிமை இல்லவாசிகள் புரிந்துகொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவித்ததாக தேர்தல் துறை கூறியுள்ளது.

மேலும், தாதிமை இல்லங்களில் பதிவான வாக்குகளில் 15 விழுக்காடு, வெற்று வாக்குச்சீட்டுகளாக இருந்ததால் அவை செல்லாதவையாகக் கணக்கிடப்பட்டன.

அதிபர் தேர்தலில் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்ட விகிதத்தில் அதன் விகிதம் 2 விழுக்காடு என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்