‘தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை’

‘தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை’

2 mins read
அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் தகவல்
22b80124-ac3b-403a-bcee-cb701d436470
நொவீனா ரைசில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தேர்தல் துறைக் கட்டடம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘இபிஆர்சி’ எனப்படும் பொதுத்தேர்தலுக்கு முன்பாகத் தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்யும் குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொகுதி எல்லை மறுஆய்வு நடைமுறை குறித்த விவாதத்தின்போது அவர் அவ்வாறு கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலை முன்னிட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவை அமைத்துவிட்டாரா என்று நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் எழும் கேள்விகளுக்குத் தேர்தல் துறை பதிலளித்து வருகிறது என்றார் திரு சான்.

மறுஆய்வுக் குழு கூட்டப்பட்டதும் அதுகுறித்துப் பொதுமக்களுக்குத் தேர்தல் துறை தகவல் அளிக்கும் என்றார் அவர்.

பிரதமர் லாரன்ஸ் வோங் சார்பில் பேசிய அமைச்சர் சான், முந்தைய சில பொதுத் தேர்தல்கள் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவின் அறிக்கை வெளியான ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குள் அறிவிக்கப்பட்டதைச் சுட்டினார்.

‘இபிஆர்சி’ அறிக்கை வெளியிடப்படுவதற்கும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் இடையில் போதிய கால அவகாசம் தேவை எனக் கோரப்போவதாகத் திரு சான் கூறினார். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தலுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள இது வகைசெய்யும் என்றார் அவர்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் பொவா, பிரதமர் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவை அமைத்துவிட்டாரா என்று கேட்டிருந்தார். மறுஆய்வு நடைமுறை மேலும் வெளிப்படையான, நம்பகமான, நியாயமான முறையில் அமைவதன் தொடர்பில் தமது கட்சியின் யோசனைகளையும் அவர் முன்வைத்தார்.

சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு நவம்பருக்குள் பொதுத் தேர்தல் இடம்பெற வேண்டும்.

குறிப்புச் சொற்கள்