தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொகுதி எல்லை மாற்றம்: எதிர்க்கட்சிகள் கருத்துரைப்பு

3 mins read
7afb0fb1-5333-4424-8272-2f4e2f1ee6ad
தொகுதி எல்லைகள் மாற்றத்துக்கு முழுமையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அதிருப்தி தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) வெளியிட்ட மாற்றங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகத் தனது கட்சியினர் தீவிரமாகச் செயல்பட்டு வரும் பகுதிகளின் தொகுதி எல்லைகள் அதிகளவில் மாற்றப்பட்டுள்ளதைப் பாட்டாளிக் கட்சி சுட்டியது.

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தொகுதி எல்லைகள் பேரளவில் மாற்றப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெரிவித்தது.

ஒன்பது தொகுதிகளில் மட்டுமே மாற்றம் செய்யப்படவில்லை என்று அது கூறியது.

யூஹுவா தனித்தொகுதி, புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி ஆகியவற்றில் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது.

தற்போது அந்த இரு தனித்தொகுதிகளும் குழுத் தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

இது ஏமாற்றம் அளிப்பதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தெரிவித்தது.

தொகுதி எல்லைகள் மாற்றம் குறித்து மற்ற சிறிய எதிர்க்கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன.

ஆனால், மாற்றம் செய்யப்பட்டுள்ள தொகுதி எல்லைகளை ஏற்று தேர்தலுக்கு தயாராக இருப்பதாக அக்கட்சிகள் கூறின.

தொகுதி எல்லைகள் உறுதிப்படுத்தப்பட்டது தேர்தலுக்குத் தயாராக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மிகவும் முக்கியம் என்று பாட்டாளிக் கட்சி கூறியது.

களமிறங்கக்கூடிய தொகுதிகள் பற்றியும் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பற்றியும் கூடிய விரைவில் கூடுதல் தகவல் வெளியிடுவோம் என்று பாட்டாளிக் கட்சி தெரிவித்தது.

தொகுதி எல்லைகளை மாற்றியதற்காகத் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு இம்முறை கூடுதல் காரணங்களை முன்வைத்தது வரவேற்கத்தக்கது என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கூறியது.

குறிப்பிட்ட சில குடியிருப்புப் பேட்டைகளில் குடியிருப்பாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தொகுதி எல்லைகளில் மாற்றம் செய்யப்படுவதாக அக்குழு தெரிவித்திருந்தது.

இருப்பினும், தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு எடுத்துள்ள பல முடிவுகளுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெரிவித்தது.

தொகுதி எல்லைகளைப் பேரளவில் மாற்றாமல் குடியிருப்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பைச் சமாளிக்க வேறு அணுகுமுறைகள் கையாளப்பட்டிருக்கலாம் என்று அது கூறியது.

“உதாரணத்துக்கு, புதிய தெங்கா குடியிருப்பு வட்டாரத்தால் ஹோங் கா நார்த் தனித்தொகுதியில் குடியிருப்பாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைச் சமாளிக்க அந்தத் தனித்தொகுதியை யூஹுவா தனித்தொகுதி, புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி ஆகியவற்றுடன் இணைத்து புதிய குழுத் தொகுதியை உருவாக்கியிருக்கலாம்.

“ஆனால் அதற்கு மாறாக, குடியிருப்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பைக் காரணமாகக் காட்டி ஜூரோங் குழுத் தொகுதி, வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, சுவா சூ காங் குழுத் தொகுதி, தஞ்சோங் பகார் குழுத் தொகுதி, ராடின் மாஸ் தனித்தொகுதி ஆகியவற்றின் தொகுதி எல்லைகள் மாற்றப்பட்டுள்ளன,” என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெரிவித்தது.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட தெலுக் பிளாங்கா தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் தனது கட்சிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியதை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஹேசல் புவா சுட்டினார்.

அந்தத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி, வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியை நூலிழையில் வென்றது.

தற்போது தெலுக் பிளாங்கா தொகுதி தஞ்சோங் பகார் குழுத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டிருப்பதை திருவாட்டி புவா சுட்டினார்.

சில மாற்றங்களுக்கான காரணங்கள் விளக்கப்படவில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்