பாலஸ்டியர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அதிகாலை நேரத்தில் மின்சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்தது.
அச்சம்பவம் காரணமாக ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அது தொடர்பாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது.
பாலஸ்டியர் சாலையில் நடந்த தீச்சம்பவம் குறித்து ஞாயிறு அதிகாலை 12:15 மணியளவில் தங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மேலும், குழாய்களில் நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்ததாகவும் ஒருவரைச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும் அது தெரிவித்தது.
மின்சைக்கிளில் தீப்பிடித்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
‘புரொஃபஷனல் பிஎச்வி டிரைவர்ஸ் சிங்கப்பூர்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தில், மின்சைக்கிள் ஒன்றில் தீ கொழுந்துவிட்டு எரிவதையும் அதன் அருகே ஒருவர் நின்றிருப்பதையும் அங்கிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறுவதையும் காண முடிந்தது.
2025ஆம் ஆண்டு, நாடாளுமன்றக் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த அமைச்சர் கா. சண்முகம், கடந்த ஐந்தாண்டுகளில் நடமாட்டச் சாதனங்கள் சம்பந்தப்பட்ட 187 தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

