சிங்கப்பூரில் உள்ள 870 பொதுப் பேருந்துகளில் குறைந்த மின்சக்தி கொண்ட யுஎஸ்பி முனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மின்சாரம் தாக்கும் அபாயம் குறைவு என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.
“இத்தகைய யுஎஸ்பி முனைகள் மிகவும் குறைவான ஐந்து வோல்ட் மின்சக்தியுடன் செயல்படுகின்றன. வழக்கமான மூன்று கம்பி இணைப்புச் சாதனங்கள் 230 வோல்ட் மின்சாரத்துடன் செயல்படுகின்றன. இதனுடன் ஒப்பிட்டால் யுஎஸ்பி முனைகளில் மின்சாரம் மிகவும் குறைவு. இதனால் மின்சக்தியால் பயணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு,” என்று ஆணையம் குறிப்பிட்டது.
அது மட்டுமல்லாமல் பொதுப் பேருந்து நடத்துநர்கள் அவர்களுடைய மாதாந்திர சோதனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதனை ஆணையமும் சோதனையிட்டு உறுதி செய்து வருகிறது.
2022 மே மாத நிலவரப்படி இங்கு, ஏறக்குறைய 870 பொதுப் பேருந்துகளில் யுஎஸ்பி முனைகள் வைக்கப்பட்டு உள்ளன என்று ஆணையம் மேலும் தெரிவித்தது.
மலேசியாவில் நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து விரைவுப் பேருந்துகளில் மூன்று கம்பி மின் இணைப்புச் சாதனங்களுக்கும் யுஎஸ்பி முனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி விரைவுப் பேருந்து ஒன்றில் கைப்பேசிக்கு மின்னூட்டம் செய்ய முயன்ற 18 வயது இளையர் ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உரிமம் பெறாத தரப்பினர் தவறான வகையில் மின் இணைப்புகளைக் கொடுத்திருந்ததால் இளையர் மின்சாரம் தாக்கி இறந்ததாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நவம்பர் 20ஆம் தேதி தெரிவித்தார்.

