ஜூலை முதல் செப்டம்பர் வரை உயரும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள்

ஜூலை முதல் செப்டம்பர் வரை உயரும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள்

2 mins read
8efe7658-a1e0-461b-bb3f-b3d827842213
ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம்வரை மின்சாரக் கட்டணங்கள் 17 விழுக்காடு உயரும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வீடுகளில் இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம்வரை மின்சாரக் கட்டணங்கள் 17 விழுக்காடு உயரும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் அறிவித்துள்ளது. எரிவாயுக் கட்டணங்களும் 7.1 விழுக்காடு உயரும் என்று அது கூறியது.

மத்திய கிழக்குப் பூசலால் அதிகரித்த இயற்கை எரிவாயு விலையால் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

பிப்ரவரி மாத இறுதிவாக்கில் இயற்கை எரிவாயு விலை கணிசமாகக் கூடியது. ஏப்ரல், ஜூன் மாதங்களில் அது தொடர்ந்து அதிகமாகவே இருந்ததால் மின்சாரத்தையும் எரிவாயுவையும் உற்பத்தி செய்ய கூடுதலாகச் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.

அதன் விளைவாக, ஜூலை மாதத்திலிருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு கிலோவாட் மணி மின்சாரத்துக்கான கட்டணம் 4.64 காசு அதிகரிக்கும் என்று எஸ்பி குழுமம் அறிக்கை வெளியிட்டது. பொருள், சேவை வரியைச் சேர்க்காமல் அந்தக் கட்டணம் இதுவரை 31.91 காசாக இருந்தது.

அப்படியென்றால் ஒரு நான்கறை கழக வீட்டின் மாதாந்தர மின்சாரக் கட்டணம் $17.14 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த மின்சாரக் கட்டணம், முந்தைய காலாண்டுடன் ஒப்புநோக்கச் சராசரியாக 17.5 விழுக்காடு அல்லது ஒரு கிலோவோட் மணிக்கு 4.66 காசு அதிகரிக்கும்.

சிட்டி எனர்ஜி வெளியிட்ட அறிக்கையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயுக்கான கட்டணம், ஒரு கிலோவாட் மணிக்கு 1.56 காசு அதிகரித்து 23.48 காசாகும் என்று குறிப்பிட்டது.

எரிசக்திச் சந்தை ஆணையத்தின் வழிக்காட்டிகளுக்கு ஏற்ப எஸ்பி குழுமமும் சிட்டி எனர்ஜி நிறுவனமும் மின்சார, எரிவாயுக் கட்டணங்களை ஒவ்வொரு காலாண்டும் மறுஆய்வு செய்கின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

புவிசார் காரணங்களால் மாறும் அனைத்துலக எரிபொருள் விலை, மின்சார, எரிவாயுக் கட்டணங்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முந்தைய காலாண்டின் முதல் இரண்டரை மாதங்களில் பதிவான எரிவாயு விலையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த காலாண்டுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

எனவே, குறிப்பிட்ட ஒரு காலாண்டில் காணப்படும் எரிபொருள் விலை மாற்றங்கள், அடுத்த காலாண்டின் மின்சாரக் கட்டணங்களைப் பாதிக்கும்.

குறிப்புச் சொற்கள்
மின்சாரம்கட்டணம்அதிகரிப்புஎரிவாயுவிலைமத்திய கிழக்கு