எரிசக்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, இங்குள்ள குடும்பங்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் கூடுதல் மின்சார, எரிவாயுக் கட்டணங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
பொருள், சேவை வரியைச் (ஜிஎஸ்டி) சேர்ப்பதற்கு முன்பு, குடும்பங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் ஒரு கிலோவாட்-மணிக்கு 0.08 காசு உயரும். அதே நேரத்தில், எரிவாயுக் கட்டணங்கள் ஒரு கிலோவாட்-மணிக்கு 0.07 காசு அதிகரிக்கும்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது, குடும்பங்களுக்கான மின்சாரக் கட்டணம் 0.3 விழுக்காடு அதிகரிக்கும் என எஸ்பி குழுமம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) அறிவித்தது.
உதாரணமாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக நாலறை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்கான சராசரி மாத மின்சாரக் கட்டணம், ஜிஎஸ்டிக்கு முன்பு 31 காசு அதிகரிக்கும்.
சிட்டி எனர்ஜி வெளியிட்ட வேறோர் அறிக்கையில், எரிவாயுக் கட்டணம் ஜூலை முதல் செப்டம்பர் வரை இருந்த 22.28 காசிலிருந்து, அக்டோபர் முதல் டிசம்பர் வரை 22.35 காசாக அதிகரிக்கும் என்று தெரிவித்தது.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதே கட்டண உயர்வுக்குக் காரணம் என்று எஸ்பி குழுமமும் சிட்டி எனர்ஜியும் கூறின. உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாறுபடும் என்றும் அவை விளக்கின.
எரிசக்திச் சந்தை ஆணையம் நிர்ணயித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டிலும் மின்சார, எரிவாயுக் கட்டணங்களை எஸ்பி குழுமமும் சிட்டி எனர்ஜியும் மறுஆய்வு செய்கின்றன.
ஒவ்வொரு காலாண்டுக்குமான மின்சாரக் கட்டணத்தின் எரிசக்திச் செலவு அங்கம், முந்தைய காலாண்டின் முதல் இரண்டரை மாதங்களில் இருந்த சராசரி இயற்கை எரிவாயு விலையைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, ஒவ்வொரு காலாண்டுக்குமான எரிவாயுக் கட்டணத்தின் எரிபொருள் செலவு அங்கம், முந்தைய காலாண்டின் முதல் இரண்டரை மாதங்களில் இருந்த சராசரி எரிபொருள் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
புவிசார் அரசியல் காரணிகளால் ஏற்படும் நிலையற்ற உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாறுபடலாம்.