சிங்கப்பூரில் அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம்வரை வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 10.4 விழுக்காடு குறையவிருக்கிறது. எரிசக்தி விலை சரிந்ததால் மின்கட்டணமும் குறைக்கப்படுகிறது.
வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 28.59 காசாக இருக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அது 31.91ஆக இருந்தது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நாலறை வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் சராசரி மாதாந்தர மின்சாரக் கட்டணம் பொருள், சேவை வரிக்குமுன் கிட்டத்தட்ட $12.99ஆக குறையும் என்று மின்விநியோக நிறுவனமான எஸ்பி குழுமம் தெரிவித்தது.
முந்தைய காலாண்டுடன் ஒப்புநோக்க, வீடுகள் அல்லாத இடங்களையும் சேர்த்து பொருள், சேவை வரிக்குமுன் ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கான ஒட்டுமொத்த மின்சாரக் கட்டணம் 10.6 விழுக்காடு அல்லது 3.32 காசுக்குக் குறையும்.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதிவரை ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கான எரிவாயுக் கட்டணம் 8.6% விழுக்காடு, அதாவது 21.45 காசுக்குக் குறையும் என்று சிட்டி எனர்ஜி நிறுவனம் குறிப்பிட்டது. கடந்த காலாண்டில் ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கான கட்டணம் 23.48ஆக இருந்தது.
எரிசக்திச் சந்தை ஆணைய வழிகாட்டி நெறிமுறைகளின்படி எஸ்பி குழுமமும் சிட்டி எனர்ஜியும் மின்சார, எரிவாயுக் கட்டணங்களை ஒவ்வொரு காலாண்டின்போதும் மறுஆய்வு செய்கின்றன.
புவிசார் அரசியல் காரணங்களால் அனைத்துலக அளவில் எரிபொருள் விலை ஏறி இறங்குவதால் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் மாறுகின்றன.
ரிஸ்டாட் எனர்ஜி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் டேவிட் சியூ, தமது எதிர்பார்ப்பின்படி கட்டணங்கள் குறைந்தது என்றும் சிங்கப்பூரர்களுக்கான நற்செய்தியை வல்லுநர்கள் பலரும் வரவேற்றனர் என்றும் குறிப்பிட்டார்.
எனினும், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஒற்றை இலக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
ஈரான் போர் மூண்டதை அடுத்து, அதிகமான சிங்கப்பூர்க் குடும்பங்கள் நிலையான விலை மின்சாரத் திட்டங்களில் இணைந்துள்ளன.
அத்தகையோர் செலுத்தவேண்டிய மின்சாரக் கட்டணங்களில் திட்டம் முடியும்வரை எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 1ஆம் தேதிவரை நிலையான விலை திட்டங்களில் இணைந்த குடும்பங்களின் எண்ணிக்கை 36.6 விழுக்காட்டிலிருந்து 38.4 விழுக்காட்டுக்கு உயர்ந்தது.
முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தின்கீழ் எஸ்பி குழுமத்திடமிருந்து மின்சாரம் வாங்குவோரின் விகிதம் அதே காலகட்டத்தில் 63.4 விழுக்காட்டிலிருந்து 61.6 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
0.1 விழுக்காட்டுக்கும் குறைவான சிங்கப்பூர்க் குடும்பங்களே மொத்த விலையில் மின்சாரத்தை வாங்குகின்றன.
