மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரின் மின்சார விநியோகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கான செலவுகளை மீட்டெடுப்பது இதன் நோக்கமாகும்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) பேசிய வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங், எரிசக்தி பாதுகாப்பு, சந்தை மேம்பாடு, கரிமம் இல்லாத எரிபொருள் உற்பத்திக்கு மாறுவது உள்ளிட்ட முயற்சிகளை தனது அமைச்சின்கீழ் செயல்படும் எரிசக்தி சந்தை ஆணையம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.
ஏற்கெனவே உள்ள எரிசக்தி சந்தை ஆணைய சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன.
இதனால் சிங்கப்பூரின் எரிசக்தி கட்டமைப்பு முறையாக செயல்படுவதை உறுதி செய்யும் இத்தகைய முயற்சிகள் தொடர்பான செலவுகளை அரசாங்கம் மீட்க முடியும்.
இதற்கு உதாரணமாக திரவ இயற்கை எரிவாயு வசதிகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது, 2021ஆம் ஆண்டில் எரிசக்தி சந்தை ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு எரிசக்தி நெருக்கடியின்போது எரிபொருளை இருப்பில் வைக்கும் நடவடிக்கையாக இது இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்த எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வைச் சமாளிக்க இருப்பில் இருந்த எரிபொருள் உதவியது என்றார் அமைச்சர் டான்.
எரிசக்தி ஆணையம் பரிந்துரைக்கக்கூடிய எந்தவொரு புதிய கட்டணத்தையும் வர்த்தக தொழில் அமைச்சர் அங்கீகரிக்க வேண்டும். ஆணையத்தின் பரிந்துரை குறித்து அமைச்சருக்கு தன்னிச்சையான ஆலோசனை வழங்க அரசு சாரா பிரதிநிதிகளை உள்ளடக்கிய செலவு மீட்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்படும் என்றும் டாக்டர் டான் கூறினார்.
‘பயனீட்டாளர் கட்டணம் செலுத்தும்’ கொள்கையின்படி, இந்த முயற்சிகளால் பயனடைபவர்களிடமிருந்து செலவுத்தொகை வசூலிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் பவர் சர்விசின் மீட்டர் கணக்கெடுப்பு, கட்டணக் குறிப்பு போன்ற சேவைகளுக்கு தற்போது நுகர்வோர் பணம் செலுத்துவதால் இது புதிதல்ல என்றார் அவர். சிங்கப்பூரில் எரிசக்தி பாதுகாப்புக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள், பருவநிலை மாற்றம் போன்ற நெருக்கடிநிலை காலத்துக்கும் புதிய சட்டம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பாக விளங்கும்.
எதிர்கால எரிசக்தி நிதியை நிறுவுவதற்கும் சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.
இந்த நிதியானது அதிக முதலீட்டுச் செலவுகள் குறிப்பிடத்தக்க வணிக, தொழில்நுட்ப, புவிசார் அரசியல் அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்தில் முதலீடுகளை எளிதாக்கும் என்று டாக்டர் டான் கூறினார்.
இந்த நிதியம், சில திட்டங்களின் வணிக ஆற்றலை மேம்படுத்த நிதி வழங்கும். தனியார் நிறுவனங்கள், சட்டபூர்வ அமைப்புகள் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் கூடுதல் முதலீடுகளை ஊக்குவிக்க உதவும். இது “மூலதனச் செலவினங்களை” ஆதரிப்பதில் கவனம் செலுத்தும்.
இந்த நிதி முதன்முதலில் பிப்ரவரி மாதம் வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. 2024ஆம் ஆண்டில் $5 பில்லியன் தொடக்க தொகையை வழங்கும் என்று அரசாங்கம் அப்போது கூறியது.
செப்டம்பர் 9 அன்று நிறைவேற்றப்பட்ட எரிசக்தி சட்டத்தின் பிற திருத்தங்களான முக்கிய எரிசக்தி சொத்துகளுக்கான மேற்பார்வை அதிகாரம், மின் பங்கீட்டை செயல்படுத்துவதற்கான அதிகாரம், நாட்டில் எரிவாயு கொள்முதலை மையப்படுத்துவது உள்ளிட்டவையாகும். இவை எரிசக்தி விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கு எரிசக்தி சந்தை ஆணையம் திறனை வலுப்படுத்த உதவும்.

