தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் $1 அதிகரிப்பு

2 mins read
12d3926a-7420-49f5-a7a3-0a266032b328
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க குறிப்பிட்ட நேரத்தின்போது மின்னியல் சாலைக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐந்து இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) $1 அதிகரிக்கப்படும் என்று புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 27) நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

நகரை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஜூரோங் டவுன் ஹால் சாலைக்குப் பிறகு உள்ள மூன்று இஆர்பி நுழைவாயில்களிலும் காலை 7.30 மணியிலிருந்து 8 மணி வரை இனி $4 செலுத்த வேண்டும்.

துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நார்த் புவன விஸ்டாவுக்குப் பிறகு மாலை 5.30 மணியிலிருந்து 6 மணி வரை $3 செலுத்த வேண்டும். மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரை $2 செலுத்த வேண்டும்.

தென்திசையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் பிரேடல் சாலைக்கு முன்பு உள்ள இஆர்பி நுழைவாயிலை காலை 8 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடந்து செல்லும் ஓட்டுநர்கள் $3 செலுத்த வேண்டும்.

வடக்குத் திசையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் தீவு விரைவுச்சாலைக்குப் பிறகு உள்ள இரண்டு இஆர்பி நுழைவாயில்களில் மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரை $4 செலுத்த வேண்டும். இரவு 7 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேர்ததில் $3 செலுத்த வேண்டும்.

தீவு விரைவுச்சாலையில் உள்ள இரண்டு இஆர்பி நுழைவாயில்களில் (காலாங் பாரு மற்றும் பெண்டிமியர் சாலைக்கு இட்டுச் செல்லும் சாலை) காலை 8.30 மணியிலிருந்து 9 மணி வரை $3 செலுத்த வேண்டும்.

ஒரே பாதையில் ஒன்றுக்கும் அதிகமான இஆர்பி நுழைவாயில்கள் இருந்தால் ஒரு நுழைவாயிலில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

விரைவுச்சாலைகளில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைப் போக்குவரத்துக் கண்காணிப்பு மூலம் தெரியவந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேற்குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தின்போது மின்னியல் சாலைக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்