டாக்கா: பங்ளாதேஷில் இயற்கை எரிவாயுப் பற்றாக்குறை மோசமடைந்துள்ளதால், மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் புதிய முயற்சிகளை எடுத்துவருகிறது.
மின்தடைகளையும் ஈரான் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சமாளிக்க அந்நாடு போராடி வருகிறது.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) முதல் நடைமுறைக்கு வந்த அரசாங்க உத்தரவின்படி, கடைகள், சந்தைகள், கடைத்தொகுதிகள் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இது வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாகும்.
வணிக நிறுவனங்கள் இப்போது காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன; அதே வேளையில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், உணவு தொடர்பான வணிகங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயுப் பற்றாக்குறை தொடர்ந்து மின்உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவிலான எரிவாயு விநியோகத்தால் மின்உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் அதிகத் தேவை இருக்கும் உச்ச நேரங்களில் தேசிய மின்கட்டமைப்பில் பல நூறு மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்தடை உண்டாகவும் இது வழிவகுத்துள்ளது.



