மின்னியல் சாலைக் கட்டணங்கள் 4 இடங்களில் உயர்கின்றன

மின்னியல் சாலைக் கட்டணங்கள் 4 இடங்களில் உயர்கின்றன

2 mins read
c3ec8f82-b57c-470b-b9dd-8b6fd4ad72df
ஜூரோங் டவுன் ஹால் ரோட்டிற்குப் பிறகு நகரை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மூன்று இடங்களில் இஆர்பி கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளன. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் உள்ள நான்கு இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணங்கள் (இஆர்பி) ஒரு வெள்ளி அதிகரிக்கவிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 12) அறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்ச் 23ஆம் தேதியிலிருந்து குறிப்பிட்ட அந்த நான்கு இடங்களில் கட்டணங்கள் உயரும்.

ஜூரோங் டவுன் ஹால் ரோட்டில் நகரை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் உள்ள மூன்று இடங்களிலும் இஆர்பி கட்டணங்கள் அதிகரிக்கும்.

அந்த வழியாகக் காலை 8.30 மணியிலிருந்து 9 மணி வரை செல்லும் வாகன ஓட்டுநர்கள் $4 கட்டணம் செலுத்துவர். 9 மணியிலிருந்து 9.30 மணி வரை சென்றால் $3 கட்டணமும் 9.30 மணியிலிருந்து 10 மணி வரை சென்றால் $2 கட்டணமும் வாகன ஓட்டுநர்கள் செலுத்துவர்.

நார்த் புவனா விஸ்தாவுக்கு அடுத்து, துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரை சென்றால் கட்டணம் $3ஆக இருக்கும்.

தீவு விரைவுச்சாலைக்கு அடுத்துவரும் மத்திய விரைவுச்சாலையில் மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் $4 கட்டணம் செலுத்த வேண்டும்.

டேஃபு மேம்பாலத்துக்கு அடுத்துவரும் காலாங் - பாய லேபார் விரைவுச்சாலையில் காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட பயணத்துக்கு $4 கட்டணம் செலுத்த வேண்டும்.

பல இஆர்பி கட்டமைப்புகளைக் கடந்துசெல்லும் வாகன ஓட்டுநர்களிடமிருந்து ஒரு முறை மட்டுமே கட்டணம் கழிக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

விரைவுச்சாலைகளின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதை இவ்வாண்டு (2026) ஜனவரி மாதம் கண்டறிந்ததாக ஆணையம் சொன்னது.

அத்தகைய வட்டாரங்களில் உள்ள நெரிசலைக் குறைக்க இஆர்பி கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அது சுட்டியது.

பிற இடங்களில் உள்ள இஆர்பி கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. வாகன ஓட்டுநர்கள் தங்கள் பயணங்களை நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளும்படி ஆணையம் அறிவுறுத்தியது.

ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் வழக்கத்தைவிட வாகனங்கள் மிகவும் மெதுவாகச் செல்வதைக் கண்காணித்துவருவதையும் அது பகிர்ந்துகொண்டது.

கொவிட்-19 காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதிரடித் திட்டத்தின்போது ஆர்ச்சர்ட் ரோட்டில் இஆர்பி கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்