சிங்கப்பூரில் தகுதிபெறும் குடும்பங்கள், பெரிய குடும்பங்களுக்கான லைஃப்எஸ்ஜி (LifeSG) சிறப்புத்தொகையை இந்த ஏப்ரல் மாதத்தில் பெறவிருக்கின்றன.
மளிகைப்பொருள்கள், போக்குவரத்து போன்ற அன்றாடச் செலவுகளைப் பெரிய குடும்பங்கள் சமாளிக்க $1,000 சிறப்புத்தொகை வழங்கப்படுகிறது.
அந்தத் தொகை லைஃப்எஸ்ஜி செயலியில் போடப்படும்.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள பெரிய சிங்கப்பூர்க் குடும்பங்கள் லைஃப்எஸ்ஜி சிறப்புத்தொகைக்குத் தகுதிபெறுகின்றன.
பிள்ளை ஒரு வயதை எட்டியவுடன் அதற்கு ஆறு வயதாகும்வரை சிறப்புத்தொகை வழங்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த தகுதிபெறும் பிள்ளைகள் சிறப்புத்தொகையைப் பெறுவர்.
தகுதிபெறும் ஒவ்வொரு பிள்ளைக்குமான சிறப்புத்தொகை, பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் போடப்படும்.
பேநவ், யுஇஎன், நெட்ஸ் கியூஆர் ஆகியவை மூலம் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் பேரங்காடிகள், மருந்துக் கடைகள், டாக்சி போன்றவற்றில் சிறப்புத்தொகையைத் தகுதிபெறும் பிள்ளைகளின் பெற்றோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஓராண்டுவரை அந்தச் சிறப்புத்தொகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஓராண்டுக்குப்பின் அது காலாவதியாகிவிடும்.
சிறப்புத்தொகை உரிய கணக்கில் போடப்பட்டவுடன் பிள்ளைகளின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளருக்கு ‘கவ்.எஸ்ஜி’ (gov.sg) என்ற தளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மேல் விவரங்களுக்கு https://www.go.gov.sg/LFS என்ற இணையத்தளத்தை நாடலாம்.

