வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்கவும் சுகாதாரச் செலவுகளை ஈடுசெய்யவும் ஓய்வுக்கால நிதிச் சேமிப்பை அதிகரிக்கவும் ஏதுவாக தகுதிபெற்ற சிங்கப்பூரர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் ரொக்க வழங்கீடுகள் அளிக்கப்படும்.
கடந்த 2024ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் 21 வயது நிரம்பிய 2.9 மில்லியன் சிங்கப்பூரர்கள், 200 வெள்ளி முதல் 600 வெள்ளி ரொக்கம் வரை பெறுவர்.
வருமானம், சொத்து மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகை கணக்கிடப்படும்.
நவம்பர் 14ஆம் தேதி நிதி, சுகாதார, மனிதவள அமைச்சுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யவும் வருங்கால மருத்துவச் சேமிப்பை உருவாக்கவும் ஏதுவாக 1974 முதல் 2003 வரை பிறந்த 1.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ஒருமுறை மெடிசேவ் நிரப்புத்தொகையாக 300 வெள்ளி முதல் 500 வெள்ளி வழங்கப்படும்.
மாஜுலா தொகுப்புத்திட்டத்தின்கீழ் 1973ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த 1.6 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ஒருமுறை மெடிசேவ் நிரப்புத் தொகையாக 1,250 வெள்ளி அல்லது 2,000 வெள்ளி வழங்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட இந்த மெடிசேவ் நிரப்புத்தொகை ஏறத்தாழ 3 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிக்கும்.
மாஜுலா தொகுப்புத்திட்டத்தின்கீழ் 1973 அல்லது அதற்கு முன் பிறந்த 800,000 சிங்கப்பூரர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஓய்வுக்கால சேமிப்பு நிதியாக 1,000 வெள்ளி அல்லது 1,500 வெள்ளி அவர்களது மசேநிதி கணக்கில் போடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தகுதிபெறுவோர், கட்டணமுறைகளைப் பொறுத்து 2024 டிசம்பர் மாதம் முதல் இந்தத் தொகையைப் பெறுவார்கள். மேல்விவரங்களுக்கு ‘சிங்பாஸ்’ கணக்கின் மூலம் govbenefits தளத்தை நாடலாம்.
மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டம், மெடிசேவ் ஆகியவற்றால் பலன்களை அடைந்துள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி டஷினி நாயுடு, 22, இந்த ரொக்கத் தொகை தனது அன்றாடப் பயணச் செலவு, படிப்புக்குத் தேவையான பொருள்கள் வாங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு உதவும் என்று சொன்னார்.
“என் தந்தை ஒருவரின் வருமானத்தில் மூன்று பேர் படிப்பதால் இந்தத் தொகை உதவியாக இருக்கும்,” என்று சொன்னார் அவர். தொடர்ந்து, கல்லூரிப் படிப்பைத் தாண்டி திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் நூல்கள், இணையவழிக் கல்வி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இது உதவும் என்றும் அவர் சொன்னார்.