செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பலதுறை மருந்தகங்களிலும் தனியார் மருந்தகங்களிலும் அக்கி அம்மை (shingles), நிமோகாக்கல் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மானியத்துடன் கூடிய கட்டணம் மட்டுமே விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிங்கிரிக்ஸ், பிவிசி 20 (Shingrix and PVC20) என்ற அந்த இரண்டு தடுப்பூசிகளும் தேசிய வயது வந்தோர் தடுப்பூசித் திட்டத்தின்கீழ் வருவதாக சுகாதார அமைச்சும் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பும் (CDA) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன. இதன்மூலம், இந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளுக்கும் மெடிசேவ் நிதியை ஒருவர் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், மெடிசேவ் பயன்பாடு 2026ஆம் ஆண்டின் மத்தியில்தான் நடப்புக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியத்துடன் கூடிய கட்டணம் என்பதால், தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் இந்த இருமுறை போட்டுக்கொள்ளும் அக்கி அம்மை தடுப்பூசிக்கு சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட அட்டை வைத்திருப்போர் தனியார் மருந்தகங்களில் $76 முதல் $300வரை கட்ட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
சாஸ் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் ஒருவர் அவர் முன்னோடித் தலைமுறையை சேர்ந்தவரா மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தவரா என்பதைப் பொறுத்தது.
தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் சுகாதார அமைச்சின்கீழ் வரும் நீண்டகாலப் பராமரிப்பு நிலையங்களில் தடுப்பூசி பெறுவோர் இந்த மானியத்துடன் கூடிய கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது. குடும்ப வருமானம், எந்தத் தலைமுறைப் பிரிவைச் சேர்ந்தோர் என்பதைப் பொறுத்து மானிய அளவு தீர்மானிக்கப்படும்.
மானியத்திற்கு தகுதிபெறும் நிரந்தரவாசி ஒருவர் கிட்டத்தட்ட $450 செலுத்த வேண்டியிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
நிமோகாக்கல் பிவிசி20 தடுப்பூசி மருந்தைப் பொறுத்தவரை தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் சாஸ் அட்டைத் திட்டத்தை செயல்படுத்தும் மருந்தகங்களில் ஒருமுறை போட்டுக்கொள்ளும் மருந்துக்கு $17 முதல் $68 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதற்கு பலதுறை மருந்தகங்களும் சுகாதார அமைச்சின்கீழ் செயல்படும் நீண்டகால பராமரிப்பு நிலையங்களும் தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு மேற்காணும் கட்டணத்தையே வசூலிக்கும். இதே தடுப்பூசி மருந்தைப் பெறும் நிரந்தரவாசிகள் கிட்டத்தட்ட $102 கட்ட வேண்டியிருக்கும்.