இஎம் சர்சிவஸ் எனும் சொத்து மேம்பாட்டு நிறுவனமான இஎம் சர்விசசின் முன்னாள் மூத்த திட்ட நிர்வாகிமீது (senior project manager) லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்துக்கு வீவக, கெப்பல் ஆகிய இரண்டும் உரிமை வகிப்பதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் 50,000 வெள்ளி பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.
இங் யின் ஹோங்
சந்தேக நபரான இங் யின் ஹோங் முன்பு இஎம் சர்விசஸ் நிறுவனத்துக்கு வேலை செய்தார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 7) 56 வயது இங் யின் ஹோங்மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவரிடம் பணத்தைத் தந்ததாக நம்பப்படும் ஆடவர்மீதும் நீதிமன்றத்தில் அதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இங் சூன் மோங்
அந்த மற்றோர் ஆடவரான 61 வயது இங் சூன் மோங், தான் இயக்குநராகப் பணியாற்றிய அட்லாஸ் மெய்ன்டேனன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக இலக்குகளுக்காக இங் யின் ஹோங்கிடம் லஞ்சம் தந்ததாக நம்பப்படுகிறது. பழுதுபார்ப்பு, புதுப்பிப்புப் பணிகளுக்காக இங் சூன் மோங் லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்குற்றம் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கூடுதல் குற்றச்சாட்டு
தான் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச் செயலிலிருந்து பெறப்பட்ட லாபத்தைக் கையாண்டதாகவும் இங் யின் ஹோங்மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டு பிப்ரவரி-ஏப்ரல் மாதகாலத்தில் தனது குடும்பச் செலவுக்காகத் தவறாக ஈட்டியதாகக் கூறப்படும் தொகையில் 12,500 வெள்ளியை இங் யின் ஹோங் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மூலம் தெரிவித்தது.
இங் யின் ஹோங்கின் வழக்கு வரும் அக்டோபர் 5ஆம் தேதி மறுபடியும் நீதிமன்ற விசாரணைக்கு வரும். இங் சூன் மோங்கின் வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும்.
இந்த விழக்கு, நீதிமன்றத்துக்கு முன் வந்த, இஎம் சர்விசஸ் தொடர்பான இரண்டாவது ஊழல் வழக்காகும். முன்னதாக, அந்நிறுவனத்தின் முன்னாள் மூத்த திட்ட நிர்வாகியான 63 வயது புவா கின் சுவான்மீது ஆகஸ்ட் 21ஆம் தேதி நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.


