குறைவான கரிமம் கொண்ட ஹைட்ரஜன் வேதிப்பொருளை தூய்மைமிகு எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்துக்கு சிங்கப்பூர் வேகமாக ஆயத்தமாகி வருகிறது.
அது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள எரிசக்திச் சந்தை ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) அழைப்பு விடுத்தது.
ஹைட்ரஜன் இறக்குமதி, ஹைட்ரஜன் உள்கட்டமைப்பின் செயலாக்கம் மற்றும் உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சட்ட விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கான கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய அந்த ஆய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், அதற்குத் தேவையான நிதி மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களும் ஆராயப்படும்.
“வருங்காலக் கொள்கைகள், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை மேம்பாடு ஆகியவற்றுக்கான உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் ஹைட்ரஜனை நாம் பயன்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது அந்த ஆலோசனை கலந்த ஆய்வு,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் எரிசக்திச் சந்தை ஆணையம் கூறியது.
ஹைட்ரஜன் வேதிப்பொருள், புதைபடிவ எரிபொருள்களைக் காட்டிலும் பருவநிலைக்கு ஏற்ற எரிபொருளாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் அதனைப் பயன்படுத்தலாமா என்பது இன்னும் ஆராய்ச்சி அளவிலும் சோதனைக் கட்டத்திலும் உள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்குத் தேவைப்படும் மின்சக்தியின் பாதி அளவை, குறைந்த கரிம ஹைட்ரஜன் வழங்கக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
இதர எரிசக்தித் தருவிப்புகளை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அமைவதைப் பொறுத்து அதற்கான சாத்தியம் கைகூடும்.
தற்போதைய மின் உற்பத்தியில் ஏறக்குறைய 95 விழுக்காடு அளவு இயற்கை எரிவாயுவையே நம்பி சிங்கப்பூர் உள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் ஹைட்ரஜனைத் தழுவிய குறைந்தபட்சம் ஒன்பது மின் உற்பத்தி ஆலைகள் இருக்கும்.
விலை ஒரு தடைக்கல்
ஹைட்ரஜன் ஆயத்த உள்கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் அதனை எரிபொருளாகப் பயன்படுத்துவதில் இன்னும் சில தடைக்கற்கள் உள்ளதாகவும் விலை அதன் முக்கிய அம்சம் என்றும் நிபுணர்களும் தொழிற்துறை வல்லுநர்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினர்.
தற்போதைய நிலையில், பசுமை ஹைட்ரஜனின் விலை இயற்கை எரிவாயுவின் விலையைக் காட்டிலும் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.
இறக்குமதியாகும் இயற்கை எரிவாயுவுக்கும் பசுமை ஹைட்ரஜனுக்கும் இடையிலான விலையை 2030ஆம் ஆண்டுக்குள் சமப்படுத்தும் முயற்சி கைகூட, பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புக்கும் அவற்றைச் சேமித்து வைக்கவும் எடுத்துச் செல்லவும் ஆகக்கூடிய செலவுகளைக் கணிசமாகக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
சிங்கப்பூர் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கலன் சங்கத்தின் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.