செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப்போல சிலரின் படங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அவர்களின் வேலையிட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிமை (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளது.
மின்னஞ்சலை அனுப்பியவர்கள், இணையத்தில் அப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டினர். மார்ச் மாதத்தில் அதுபோன்ற மூன்று சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
ஆகவே, மின்னஞ்சலில் அத்தகைய மிரட்டல்களைப் பெறுவோர், எவ்விதத் தொடர்பையும் செய்துக்கொள்ளக்கூடாது என்றும் மோசடிக்காரர்களுக்குப் பணம் அனுப்பிவைக்கக் கூடாது என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பொதுவாகக் கிடைக்கும் ஒருவரின் புகைப்படங்கள், மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவற்றைக் கொண்டு மோசடிக்காரர்கள் அத்தகைய மிரட்டல்களைச் செய்வதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோசடிகள் குறித்து உடனடியாகப் புகார் அளிக்குமாறும் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் பிரதிகளை அனுப்பிவைக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அதுபோன்ற சம்பவங்களின் தொடர்பில் தகவல் தெரிவிக்க விரும்புவோர், 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.
உடனடி உதவித் தேவைப்படுவோர் 999 என்ற எண்ணை அழைக்கலாம்.

