சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.
மே 2025ல் பொதுச்சேவையிலிருந்து ஓய்வுபெற்ற திரு டியோ, தெமாசெக் ஹோல்டிங்ஸில் வரும் ஜூலையில் துணைத் தலைவராகச் சேர்ந்து அக்டோபர் 9ஆம் தேதியன்று அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.
பல்வேறு அமைச்சர் பதவிகளையும் துணைப்பிரதமர் பதவியையும் வகித்துள்ள திரு டியோ, தற்பாேது தலைவராக உள்ள திரு லிம் பூன் ஹெங்கிற்குப் பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆகஸ்ட் 2013 முதல் தலைவராகச் செயல்பட்ட திரு லிம்மின் நிர்வாகத்தின்கீழ், நன்மதிப்புள்ள அனைத்துலக முதலீட்டு நிறுவனமாக தெமாசெக் தன்னை நிலைநாட்டியிருப்பதாக அந்நிறுவனம் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
திரு லிம்மின் கடப்பாடுமிக்க சேவைக்காகப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
“(திரு லிம்மின்) பராமரிப்பில் தெமாசெக் உலக அளவில் தனது தாக்கத்தை விரிவுபடுத்தியதுடன் அதன் நிர்வாக முறையை வலுப்படுத்தி நீடித்த நிலைத்தன்மைத்துத் தலைமையுடையதாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது,” என்று திரு வோங் கூறியுள்ளார்.
திரு டியோவைப் புதிய பொறுப்புக்கு வரவேற்பதாகக் கூறிய திரு வோங், “பொதுச்சேவையில் கொண்டுள்ள விரிவான அனுபவமும் சிங்கப்பூரின் உத்திபூர்வ முன்னுரிமைகள் குறித்த ஆழ்ந்த புரிதலும் கொண்ட திரு டியோ, தெமாசெக்கின் வலுவான அடித்தளத்தை மேம்படுத்துவார் என்பதிலும் அத்துடன், சிக்கல்கள் பெருகியுள்ள உலகச் சூழலில் அதன் நீடித்த வெற்றியை உறுதிசெய்வார் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்று கூறினார்.