புதிய காப்புறுதி ரைடர் திட்டச் சந்தா 30 விழுக்காடு வரை குறையலாம்

புதிய காப்புறுதி ரைடர் திட்டச் சந்தா 30 விழுக்காடு வரை குறையலாம்

2 mins read
03d1b1b4-6866-4a92-a230-05d1d1a29b30
சிங்கப்பூரில் உள்ள ஏழு காப்புறுதி நிறுவனங்களும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து புதிய ஒருங்கிணைந்த ‌ஷீல்ட் ரைடர் திட்டத்தை (ஐபி) அறிமுகம் செய்யவிருக்கின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காப்புறுதியின் புதிய ரைடர் திட்டத்துக்கு மாறவிரும்பும் சந்தாதாரர்களுக்கான மாதச் சந்தாக் கட்டணம் குறைந்தது 30 விழுக்காடு வரை குறையக்கூடும் என்று தனியார் சுகாதாரக் காப்புறுதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் உள்ள ஏழு காப்புறுதி நிறுவனங்களும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து புதிய ஒருங்கிணைந்த ‌ஷீல்ட் ரைடர் திட்டத்தை (ஐபி) அறிமுகம் செய்யவிருக்கின்றன.

ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தின்கீழ் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்திய பிறகே காப்புறுதித் திட்டத்திலிருந்து கட்டணங்கள் கழிக்கப்படும். அந்த நிபந்தனையைச் சுகாதார அமைச்சு மாற்றுகிறது.

அத்துடன் இணைக் கட்டண வரம்பையும் $6,000க்கு அமைச்சு உயர்த்தியது. இத்தகைய நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய காப்புறுதி நிறுவனங்கள் புதிய ஐபி திட்டத்தை அறிமுகம் செய்கின்றன.

தற்போதுள்ள ரைடர் திட்டம் நிபந்தனையை மீறுவதால் பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள் அவற்றைக் கைவிடுவதாக முன்னர் தெரிவித்தன.

ஒருசில காப்புறுதி நிறுவனங்கள் ஏப்ரலுக்கும் முன்னரே புதிய ரைடர் திட்டத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளன.

அனைத்து வயதினருக்குமான புதிய ஐபி ரைடர் திட்டத்துக்கான சந்தாக்கள் குறைந்தது 30 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று புரூடென்ஷியல் சிங்கப்பூர் நிறுவனம் குறிப்பிட்டது.

புதிய ரைடர் திட்டத்தில் இணையும் சந்தாதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ற மருத்துவமனைத் திட்டங்களைத் தொடர்ந்து தேர்வு செய்யும் அம்சம் இதற்குமுன் இருந்ததுபோல வழங்கப்படும் என்று புரூடென்ஷியல் சொன்னது.

இன்கம் நிறுவனம் இரண்டு புதிய ரைடர் அம்சங்களை அறிவிக்கவிருக்கிறது. இணைக் கட்டணம் செலுத்துவதில் வெவ்வேறு அடுக்குநிலைகள் அவற்றுள் ஒன்று. அத்துடன் புதிய சலுகைகளையும் நிறுவனம் வழங்குவதாகக் கூறியது.

சந்தாவைப் பொறுத்தவரை சராசரி சந்தா சேமிப்பு 32 விழுக்காடாக இருக்கக்கூடும் என்று இன்கம் சொன்னது.

சிங்லைஃப் நிறுவனம் மூன்று ரைடர் அம்சங்களை ஐபி திட்டத்தின்கீழ் அறிவிக்கவுள்ளது. மார்ச் இறுதியில் மேல் விவரங்களைப் பகிரவிருப்பதாக சிங்லைஃப் தெரிவித்தது.

அனைத்து வயதினருக்குமான சந்தாக்கள் 30 விழுக்காடு வரை குறையும் என்றும் 84 விழுக்காடு வரைகூட அது குறையலாம் என்றும் அது சுட்டியது.

அதாவது $2,000 சந்தா ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு $1,400க்குக் குறையலாம். குறிப்பிட்ட சில சூழல்களில் அது $320ஆகக் கூட குறையலாம்.

குறிப்புச் சொற்கள்