906 பொதுப் பேருந்துகள் 2030க்குள் புதுப்பிப்பு: நிலப் போக்குவரத்து ஆணையம்

906 பொதுப் பேருந்துகள் 2030க்குள் புதுப்பிப்பு: நிலப் போக்குவரத்து ஆணையம்

2 mins read
35122f28-99ff-43cd-8a1d-eee5bf434faa
2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை முதல் முறையாக 600க்கும் அதிகமான பொதுப் பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் செயல்படும் கிட்டத்தட்ட 906 பொதுப் பேருந்துகளில் புதிய இருக்கைகளையும் நடைத் தளங்களையும் பயணிகள் எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு பேருந்துகள் புதுப்பிக்கப்படுகின்றன. அவற்றுள் 353 ஓரடுக்குப் பேருந்துகள்; 553 ஈரடுக்குப் பேருந்துகள்.

அவை அனைத்தும் பத்து ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சேவை வழங்கியுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுப் பேருந்துத் துறை குத்தகை முறைக்கு மாறியதைத் தொடர்ந்து நிலப் போக்குவரத்து ஆணையம் இரண்டாவது முறையாகப் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.

2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை முதல் முறையாக 600க்கும் அதிகமான பொதுப் பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டன. பேருந்துகளின் பயணிகள் இருக்கைகளும் ஓட்டுநர் இருக்கைகளும் மாற்றப்பட்டதுடன் நடைத் தளங்கள், கதவுகள், சன்னல்கள் எனப் பேருந்துகள் புதுப்பொலிவு பெற்றன.

தற்போது மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புப் பணிகளில் பேருந்துகளின் உட்புறங்கள் மேம்படுத்தப்படும் என்றும் வசதியான பயணம் உறுதிசெய்யப்படும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டிடம் சொன்னது.

2027ஆம் ஆண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதுப்பிப்புப் பணிகள் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓரடுக்குப் பேருந்துகளுக்கான புதுப்பிப்புப் பணிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமும் ஈரடுக்குப் பேருந்துகளுக்கான பணிகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பிப்புப் பணிகளைக் கட்டங்கட்டமாக மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிறுவனங்களுடன இணைந்து செயல்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

புதுப்பிப்புப் பணிகளின்போது போதுமான பேருந்துகள் சேவையில் இருப்பதையும் ஆணையம் உறுதிசெய்யும் என்றது. கடந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூரில் 6,067 பொதுப் பேருந்துகள் செயல்பட்டன.

சிங்கப்பூரில் உள்ள பொதுப் பேருந்துகள் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். அதன்பின் அவை சேவையிலிருந்து நீக்கப்படும். பேருந்துகளின் முக்கிய மின்னியல் பாகங்களும் புதுப்பிப்புப் பணிகளின்போது மாற்றப்படும். அவற்றை மாற்றுவதன் மூலம் பேருந்து பாதுகாப்பாகச் செயல்படுவதையும் அவற்றின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த முடியும் என்றது ஆணையம்.

குறிப்புச் சொற்கள்