வளர்தமிழ் இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘தமிழ் மொழி விழா’, இம்முறை மார்ச் 28 முதல் ஏப்ரல் 26 வரை நடைபெறவுள்ளது.
சிங்கப்பூரில் 40க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் திரளாகக் கூடி மொத்தம் 43 நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக வளர்தமிழ் இயக்கம் சனிக்கிழமை (மார்ச் 14) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், விழாவைப் பற்றிய விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் அதிகரிக்கச் சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காகப் பங்காளித்துவ அமைப்பினர் திரளவுள்ளனர்.
‘ஈடுபாடு’ என்பது இவ்வாண்டின் கருப்பொருள்.
தமிழ் மொழியைத் தழைக்கச் செய்வதற்கும் வலுப்படுத்துவதற்கும் துடிப்புமிக்க பங்கேற்பு, உழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலர் பள்ளிப் பிள்ளைகள், மாணவர்கள் ஆகியோர் முதல் வேலை செய்யும் பெரியவர்கள், மூத்தவர்கள்வரை, தமிழ் பேசுவோர் அனைவருக்கும் உற்சாகம் ஊட்டவும் தமிழ் மொழியையும் மரபையும் சுவைக்க ஊக்குவிக்கவும் இந்தக் கருப்பொருள் முனைகிறது.
20ஆம் ஆண்டுநிறைவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி
விழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்றைத் தமிழர் பேரவை சனிக்கிழமை, இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தவுள்ளது.
மீடியாகார்ப் பிரபலங்கள் அங்கம் வகிக்கும் இந்நிகழ்ச்சியில், விழாவின்போது என்னென்ன நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம் என்பது தெரியவரும்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிகழ்ச்சிக்கான சிறப்பு விளையாட்டு அட்டை ஒன்றை நிரப்பும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.
மேலும் மீடியாகார்ப் அரங்கில் மார்ச் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள தமிழ் மொழி விழா 2026ன் அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்ச்சி, வசந்தம் தொலைக்காட்சி ஒளிவழியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்நிகழ்ச்சி, ‘மீவாட்ச்’ (mewatch) தளத்திலும் காட்டப்படும்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், விழாவை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

