அங் மோ கியோவில் இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கான புதிய பள்ளிக்கூடம் ஒன்று செயல்படவிருக்கிறது.
ஏபிஎஸ்என் சௌயாங் பள்ளி இதற்குமுன் இருந்த இடத்தில் புதிய பள்ளி வளாகம் அமைந்துள்ளது.
முதற்கட்டமாகப் பள்ளியில் இவ்வாண்டு 50 தொடக்கநிலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதேபோன்று அடுத்த ஆண்டும் இரண்டாம் தொகுதி மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.
முழுமையாகச் செயல்படும்போது 7 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் பள்ளியில் இணைந்து பாடம் கற்கலாம்.
நான்கு ‘ஸ்பெட்’ (SPED) எனும் சிறப்புக் கல்விப் பள்ளிக்கூடங்களை நடத்தும் சிறப்புத் தேவையுடையோருக்கான சங்கம் (ஏஎஸ்பிஎன்), ஐந்தாவதாக அங் மோ கியோவில் உள்ள பள்ளியை நிறுவியுள்ளது.
கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்துவரும் நிலையில் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று புதிய ஸ்பெட் பள்ளிக்கூடங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மரினா பே சேன்ட்சில் நடைபெற்ற ஏபிஎஸ்என் சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் புதிய பள்ளிக்கூடம் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
பிள்ளைகளிடையே கற்றல் குறைபாடு இருப்பது முன்கூட்டியே கண்டறியப்படுவதாலும் பெற்றோரிடையே அதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாலும் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஏபிஎஸ்என் வாரியத் தலைவர் ஆண்டனி ஃபொக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகளின் அளவு சிறியதாக இருப்பதுடன் கல்வியாளர்களும் காட்சிகளை அதிகம் பயன்படுத்தி மாணவர்களுக்கு வழிகாட்டுவர்.
அதற்காகக் கூடுதல் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவேண்டும் என்ற திரு ஃபொக், சிறந்த பழக்கங்களை அறிந்துகொள்ள பிற ஸ்பெட் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் சொன்னார். அங்குக் கடைப்பிடிக்கப்படும் பழக்கங்களை ஏபிஎஸ்என் பள்ளிகளில் அறிமுகம் செய்வதாகவும் திரு ஃபொக் குறிப்பிட்டார்.
ஏபிஎஸ்என் நிர்வகிக்கும் நான்கு பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்றும் 1,300க்கும் அதிகமான மாணவர்கள் அங்குப் பயில்கின்றனர் என்றும் திரு ஃபொக் குறிப்பிட்டார்.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 12,000 மாணவர்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு ஸ்பெட் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது கிட்டத்தட்ட 9,000 மாணவர்கள் ஸ்பெட் பள்ளிகளில் பயில்கின்றனர்.

