சிங்கப்பூரில் அவசரகால சேவைகள் இனி மேலும் திறமையாகச் செயல்படும். ஏனெனில் புதிய தொகுதி ஆம்புலன்ஸ்களில் இப்போது ஒரு நோயாளிக்குப் பதிலாக இரண்டு நோயாளிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
இந்த புதிய வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட ஏழாம் தலைமுறை ஆம்புலன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
மேம்படுத்தப்பட்ட இந்த ஆம்புலன்ஸ்களில், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், மருத்துவ உதவியாளர்கள் மேலும் திறமையாக மருத்துவச் சேவை வழங்கவும் உதவும் பல மேம்பட்ட வசதிகளும் உள்ளன.
ஜூலை 9ஆம் தேதி முதல், சிங்கப்பூர் முழுவதும் ஐந்து, ஏழாம் தலைமுறை ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செயல்பாட்டில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களின் ஒரு பகுதியாகும்.
ஏழாம் தலைமுறை ஆம்புலன்சின் தூக்குப் படுக்கை ஏற்றும் அமைப்பில் மேம்படுத்தப்பட்ட கப்பி அமைப்பு உள்ளது. இது, நோயாளிகளை ஏற்றும்போது ஆம்புலன்ஸ் குழுவினர் பயன்படுத்த வேண்டிய விசையின் அளவைக் குறைக்கிறது.
வரும் ஆண்டுகளில், ஆறாம் தலைமுறை ஆம்புலன்ஸ்களுக்குப் பதிலாக மேலும் பல வாகனங்கள் படிப்படியாகப் பயன்படுத்தப்படும் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
துணை மருத்துவப் பணியாளர்கள், அவசர மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்தப் புதிய ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டது என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.
எழாம் தலைமுறை ஆம்புலன்சின் நோயாளிப் பிரிவு, மருத்துவச் சேவையை மிகவும் திறம்பட வழங்குவதற்காகவும், அதே நேரத்தில் சாலையில் துணை மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், நோயாளியை நேரடியாக அணுகுவதற்கும், துணை மருத்துவப் பணியாளர்கள் அமர்ந்தபடியே சிகிச்சை அளிப்பதற்கும் வழிவகுக்கும். பக்கவாட்டில் துணை மருத்துவப் பணியாளர்களின் இருக்கைகள் அடங்கும்.
நெகிழ்வுத்தன்மை கொண்ட இருக்கைவார்
இந்த இருக்கைகளில் அதிக நெகிழ்வுத்தன்மை கொண்ட இருக்கைவார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, துணை மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருக்கைவாரைக் கழற்றாமல், நோயாளியைக் கவனிப்பதற்காக முன்னோக்கிச் சாய அனுமதிக்கின்றன.
அடிக்கடி பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களும், அமர்ந்திருக்கும் துணை மருத்துவப் பணியாளர் எளிதில் அணுகும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ் நகரும்போது மருத்துவப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் கீழே விழுவதைத் தடுப்பதற்காக, அவை இப்போது விமானத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அலமாரியைப் போன்ற ஒரு மேல்புறப் பாதுகாப்பு அலமாரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


