ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட நெருக்கடியால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தின் ஐந்து மாதங்களில், சூரிய ஆற்றலில் செய்யப்பட்ட முதலீடுகள், மின்சாரம் தொடர்பான புதைபடிவ எரிபொருள் இறக்குமதியில் சிங்கப்பூருக்கு சுமார் 97 மில்லியன் அமெரிக்க டாலர் ($123.8 மில்லியன்) சேமிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அண்மைய அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
இந்தச் சேமிப்பில் ஏறக்குறைய அனைத்தும், தவிர்க்கப்பட்ட எரிவாயு இறக்குமதியிலிருந்து கிடைத்துள்ளதாக, ஃபின்லாந்தைச் சேர்ந்த எரிசக்தி, தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையம், ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இதில், ஹோர்முஸ் நெருக்கடியால் இயற்கை எரிவாயு மீது விதிக்கப்பட்ட கூடுதல் விலையைத் தவிர்த்ததன் மூலம் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பு கிடைத்துள்ளது என்று அந்த மையத்தின் ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
மையத்தின் ஐரோப்பா-ரஷ்யா கொள்கை, எரிசக்தி பகுப்பாய்வுக் குழுவின் தலைவர் ஐசக் லெவி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பிய மின்னஞ்சல் நேர்காணலில், “இந்தச் சேமிப்பு, சிங்கப்பூரின் சூரிய ஆற்றல் விரிவாக்கத் திட்டத்தின் நன்மைகளை எடுத்துக் காட்டியுள்ளது,” என்று கூறினார்.
இந்தப் புள்ளிவிவரங்கள் மொத்த விலை மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
செலவு சேமிப்புகள் இருந்தபோதிலும், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்திருக்கும் தன்மையால், அமெரிக்கா-ஈரான் மோதல் தொடங்கியதைத் தொடர்ந்து வந்த ஆறு மாதங்களில் சிங்கப்பூர், 8.1 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் செலவை எதிர்கொண்டதாக ஒரு சுயேச்சை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இக்காலகட்டத்தில் கூடுதல் புதைபடிவ எரிபொருள் இறக்குமதிச் செலவுகளைச் சந்தித்த 171 வட்டாரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் 13வது இடத்தில் இருந்ததாக திரு லெவி குறிப்பிட்டார். இதில் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியவை மிக அதிக நிதிச் சுமையைச் சுமந்தன.
எரிசக்தி, தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த லூக் விக்கெண்டன், லாரி மில்லிவிர்டா ஆகியோரால் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, புதைபடிவ எரிபொருள் இறக்குமதியாளர்கள் எதிர்கொண்ட நிதி ரீதியான தாக்கங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
சிங்கப்பூர் மின் உற்பத்தி, தொழில்துறைத் தேவைக்காகப் புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்கிறது.
2020ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரிய ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளால், மின் உற்பத்திக்கான புதைபடிவ எரிபொருள் இறக்குமதித் தேவை குறைந்ததன் விளைவாகவே இந்தச் சேமிப்பு சாத்தியமானதாக திரு லெவி தெரிவித்தார்.
