மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக இடங்களை எளிதில் அணுகக்கூடியதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை சோதிக்கும் முதல் நகரங்களாக குவீன்ஸ்டவுன், மரின் பரேட் ஆகியவை இருக்கும்.
‘எஸ்ஜி எனேபல்’ தலைமையில், 2027ல் தொடங்கும் இந்த முன்னோடித் திட்டம், பூங்காக்கள், உணவு நிலையங்கள் போன்ற இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உகந்ததாக மாற்றுவதற்காக அடித்தள அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். அதே நேரத்தில், பொதுக் கல்வி முயற்சிகள், மாற்றுத்திறனாளிகளுடன் குடியிருப்பாளர்கள் அதிக நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் பழகுவதை ஊக்குவிக்கும்.
இந்த இரண்டு நகரங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோ பெய் மிங், எரிக் சுவா ஆகியோரின் தொகுதிகளாகும். இவர்கள், மாற்றுத்திறனாளிகள், அவர்களது குடும்பங்களுக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்காக, 2025 டிசம்பரில் அமைக்கப்பட்ட அமைப்புகளுக்கிடையிலான ஒரு பணிக்குழுவின் அங்கத்தினர்களாக உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் வாழ்வதற்கு உதவும் முயற்சிகளை ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 4) அறிவித்த இந்தப் பணிக்குழுவை சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணை அமைச்சரான கோ வழிநடத்துகிறார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான சுவா, குவீன்ஸ்டவுன் பகுதியில் அணுகல் வசதியை மேம்படுத்துவதிலும், நடைபாதைகள் இரண்டு சக்கர நாற்காலிகள் செல்லும் அளவுக்கு அகலமாக இருப்பதை உறுதி செய்வது போன்ற நுணுக்கமான அம்சங்களில் கவனம் செலுத்துவதிலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறினார்.
புக்கிட் மேராவில் உள்ள எனேபலிங் வில்லேஜில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு சுவா, இந்தப் புதிய முயற்சிகள், இந்தச் சுற்றுப்புறங்களில் அனைவரையும் உள்ளடக்குவதை ஒருமுறை மட்டும் நடைபெறும் செயல்பாடுகள் மூலம் அல்லாமல், ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறினார்.
“உள்ளடக்கம் என்பது மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனி இடங்களை உருவாக்குவதாக இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.
“நன்றாக வாழ்வது என்பது சேவைகளைப் பெறுவது மட்டுமல்ல, அன்றாட இடங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் உணர்வதுதான்,” என்று மாற்றுத்திறனாளிகளும் அவர்களது பராமரிப்பாளர்களும் கூறியதாக, பணிக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
“பொதுமக்களிடையே புரிதல் இல்லாததால் உரையாடல்கள் கடினமாக இருப்பதாகச் சிலர் உணர்ந்தனர். மற்றவர்களோ தங்கள் மாற்றுத்திறன் காரணமாகத் தாங்கள் விமர்சிக்கப்படுவோமோ என்று கவலைப்பட்டனர்.
“நாம் சந்திப்பதற்கும், இணைந்து பணியாற்றுவதற்கும், ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்கும் எவ்வளவு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ, அந்த அளவிற்கு இயல்பாகவே அனைவரையும் உள்ளடக்குவது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறும்,” என்று திரு சுவா கூறினார்.
