சிங்கப்பூர் ஆயுதப்படையின் 2026ஆம் ஆண்டிற்கான சிறந்த கடல்சார் பாதுகாப்புப் பிரிவு விருதை ‘ஆர்எஸ்எஸ் பொங்கோல்’ கப்பல் வென்றுள்ளது.
இந்தக் கப்பலில் கடல்சார் முறையின் மேற்பார்வையாளராக மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து வருபவர் முகுந்தன் சுப்பிரமணியம், 39.
சிங்கப்பூர் குடியுரசு கடற்படையில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது சிறந்த சேவையை இவர் வழங்கி வருகிறார்.
கப்பலில் இருக்கும் உந்துவிசை அமைப்புகள், குளிரூட்டும் சாதனங்கள், தீயணைப்பு அமைப்புகள் ஆகியவற்றைப் பராமரிப்பது இவருடைய முதன்மைப் பொறுப்பாகும்.
கடலில் பயணம் செய்யும்போது ஏற்படும் கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள், சவால்களை எதிர்கொள்ள கப்பலை எப்போதும் தயார்நிலையில் இவர் வைத்திருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் பொங்கோல் கப்பல் இந்த மிக உயரிய விருதைப் பெற்றதில் முகுந்தனின் கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் பெரும் பங்கு உள்ளது.
இந்த மகத்தான வெற்றியைத் தனது கப்பல் குழுவினரின் கூட்டு முயற்சி மற்றும் சிறந்த தொழில்முறைத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இவர் பார்க்கிறார்.
“பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய பிறகு, கப்பலில் இருக்கும் ஒவ்வொரு பங்களிப்பும் மிக முக்கியமானது என்பதை நான் கற்றுக்கொண்டேன். இங்கே சிறிய பொறுப்பு என்று எதுவுமே இல்லை,” என்று முகுந்தன் கூறினார்.
கப்பலில் பணிபுரியும் ஒவ்வோர் ஊழியரின் பங்களிப்பும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிகவும் முக்கியமானது என்று இவர் நம்புகிறார்.
பொதுவாக, கப்பல் பழுதுபார்க்கும் பணிகள் கரையில்தான் நடக்கும் என்றாலும், சில நேரங்களில் நடுக்கடலிலும் அவசரப் பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
அதிர்வுகளுடன் இயந்திரங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் அத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும், முகுந்தன் தனது குழுவினருடன் இணைந்து சாதுரியமாகப் பழுதுகளைச் சரிசெய்கிறார்.
“எங்கள் குழுவின் உழைப்பால் கப்பல் எந்தவிதத் தடையுமின்றி சீராக இயங்குவதைக் காண்பதுதான் எனக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த, பலன் தரும் சாதனையாகும்,” என்று இவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இவ்வளவு சவாலான கடற்படைப் பணியில் முகுந்தன் தொடர்ந்து சாதனை படைப்பதற்கு இவரது குடும்பத்தினரின் முழு ஆதரவும் ஒரு முக்கியக் காரணமாகும்.
இவர் நீண்டநாள் கடல் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, இவரது பெற்றோர் இவருக்குப் பிடித்த அஸாம் பெடாஸ், மீன் குழம்பைச் சமைத்துத் தருகிறார்கள்.
மீன்பிடிக்கச் செல்லும்போது இவர் கொண்டுவரும் மீன்களை வைத்து இவரது பெற்றோர் அன்போடு சமைத்துக் கொடுத்து இவரை எப்போதும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைக்கிறார்கள்.
முகுந்தனுக்குத் தனது ஓய்வு நேரத்தில் கணினிகளைப் பழுதுபார்ப்பது, உடற்பயிற்சி செய்வது, கணினி விளையாட்டுகள் விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகள் உள்ளன.
நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் தனது பணி பங்களிக்கிறது என்பதை நினைக்கும்போது தனக்குத் தினமும் பெருமிதம் உண்டாகிறது என்று கூறினார்.
சிங்கப்பூர் கடற்பகுதியை எப்போதும் பாதுகாப்பாகவும் கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாகவும் வைத்திருக்க முகுந்தன் தொடர்ந்து தமது திறமைகளை மேம்படுத்தி உழைக்க விரும்புகிறார்.

