சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும் நோக்கில், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளோர்க்கான இடைநிறுத்த வரம்பு (Suspension Threshold) 18 தண்டனைப் புள்ளிகளாகக் குறைக்கப்படவுள்ளது.
தகுதிகாண் பருவத்தில் (Probationary period) இல்லாத வாகனவோட்டிகள், 24 மாதங்களில் 18 தண்டனைப் புள்ளிகள் பெறுவது இடைநிறுத்தத்திற்கு வழிவகுக்கும்.
இது 2027 ஜனவரிமுதல் நடைமுறைக்கு வரும். இதுவரை, முதன்முறையாக 24 மாதங்களில் 24 புள்ளிகள் பெறும் வாகனவோட்டிகளுக்கு 12 வார இடைநிறுத்தமும், அடுத்தடுத்து 12 மாதங்களில் 12 தண்டனைப் புள்ளிகள் பெற்றால் 24 வாரங்கள் முதல் ஐந்தாண்டுகள் வரை இடைநிறுத்தம் விதிக்கப்படுகிறது.
புதிய நடைமுறையின்கீழ், இடைநிறுத்தக் காலமும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களில் எண்ணிக்கை கடந்த ஆண்டு பத்தாண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய போக்குவரத்துக் காவல்துறை, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை நீண்டகாலம் தடுத்து வைக்கும் நோக்கில் இது கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தது.
அண்மையில் உள்துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் விளக்கிய போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான வலுவான அமலாக்கத்துக்கான சட்ட மாற்றங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஓட்டுநர் மேம்பாட்டுப் புள்ளி முறையைக் (Driver Improvement Points System) கடுமையாக்கவுள்ளது.
சாலைப் பாதுகாப்பு குறிந்துள்ளதைச் சுட்டிய போக்குவரத்துக் காவல்துறை, அதனை மேம்படுத்தும் நோக்கில், 2027 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஓட்டுநர் மேம்பாட்டுப் புள்ளி முறையில் மூன்று முக்கிய அம்சங்களில் மாற்றங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன்கீழ், தகுதிகாண் பருவத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கான இடைநிறுத்த வரம்பு, 12 மாதங்களில் 13 புள்ளிகள் எனும் அளவிலிருந்து 12 புள்ளிகளாகக் குறைக்கப்படும்.
இடைநிறுத்தக் கால அளவைக் குறைக்கும் மறுபயிற்சியையும் இனி முதன்முறை இடைநிறுத்தத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும். இரண்டாவது முறை இடைநிறுத்தம் பெறும் வாகன ஓட்டிகளுக்கு அது இனி பொருந்தாது.
பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் பயிற்சியை பலர் மேற்கொள்ளாததாலும், அது பெரிதும் பலனளிக்காததாலும் கைவிடப்படுவதாகக் காவல்துறை தெரிவித்தது.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து அதற்கான நியமனக் கடிதங்களைப் போக்குவரத்துக் காவல்துறை திரும்பப் பெறுவதுடன், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அப்பயிற்சி முழுமையாகக் கைவிடப்படும்.
இப்புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தபின், குறைந்தது 12 மாதங்களுக்கு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் இருப்பதே தண்டனைப் புள்ளிகளைக் குறைக்கும் ஒரே வழியாக இருக்கும்.
போக்குவரத்தின் தொடர்பில் நன்னடத்தைக்காக வழங்கப்படும் ஊக்கமளிப்பு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இம்மாற்றங்களால் யாரும் இடைநிறுத்த வரம்புகளை நெருங்கும் நிலைக்குத் தள்ளப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக 2026 டிசம்பர் 31 நிலவரப்படி தகுதிகாண் பருவத்தில் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அதிகபட்சமாக ஆறு புள்ளிகள் வரையும், தகுதிகாண் பருவத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு ஒரு புள்ளியும் குறைக்கப்படும்.
குறைக்கப்படும் புள்ளிகளின் எண்ணிக்கையைவிடக் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள வாகன ஓட்டிகளுக்குப் புள்ளிகள் மொத்தமாகக் குறைக்கப்படும். இவை, ஜனவரி 1ஆம் தேதிக்குமுன் பெற்ற புள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

