சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத்திற்கு மாறியது

2 mins read
561d6484-e349-4997-8744-bccf90cac0ce
புதிய இடத்திற்கு மாறிச் செல்வதற்கு முன்னதாக, மருத்துவமனையின் பழைய அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு முன்னர் நினைவுப் படம் எடுத்துக்கொண்ட பணியாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பழைய கட்டடங்களுக்கு நவீனமயப் பொலிவுதரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் இருபதாண்டுக் கனவு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நிறைவேறியது.

வருங்காலச் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்குத் தயாராகும் விதத்தில் 20 ஆண்டு புதுப்பிப்புப் பெருந்திட்டத்தில் அதன் அவசரச் சிகிச்சைப் பிரிவும் அடங்கும்.

எண்.1, ஹாஸ்பிட்டல் பொலவார்ட் முகவரியில், அந்த மருத்துவமனையின் தேசிய நரம்பியல் கழகக் கட்டடத்திற்கு அவசரச் சிகிச்சைப் பிரிவு மாறியுள்ளது.

அந்தப் புதிய இடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் அவசரச் சிகிச்சைப் பிரிவு செயல்படத் தொடங்கியது. காலை 8.31 மணிக்கு முதல் ஆம்புலன்ஸ் அங்கு வந்தது.

அதன் திறப்பு நிகழ்வையொட்டி, காலை 6.48 மணிக்கு மருத்துவர்களும் தாதியர்களும் பிறரும் சேர்ந்து ஏறத்தாழ 200 பேர் மருத்துவமனையின் பழைய கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.

அவசரச் சிகிச்சைப் பிரிவின் தலைவர் இணைப் பேராசிரியர் கென்னத் டான் பூன் கியட்டும் அவர்களில் ஒருவராக நடந்து சென்றார்.

பழைய கட்டடத்தில் இருந்த ‘அவசரம்’ (Emergency) என்று எழுதப்பட்ட பதாகையை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் புதிய கட்டடத்துக்கு ஏந்திச் சென்றனர்.

புதிய கட்டடத்தில் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய பேராசிரியர் டான், இடமாற்றத்திற்குக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

புதிய கட்டடத்துக்கு கட்டம் கட்டமாக மாறுவது 2024 டிசம்பரில் தொடங்கியது. பழைய கட்டடத்தில் பணிகளைச் செய்துகொண்டே புதிய கட்டடத்துக்கு மாறுவதற்கான செயல்களிலும் அவசரச் சிகிச்சைப் பிரிவின் மருத்துவக்குழு கவனம் செலுத்தியது என்றார் அவர்.

புதிய கட்டடத்துக்கான நிலம் தோண்டும் நிகழ்வு 2018 ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கியது. இதன் அதிகாரபூர்வத் திறப்பு வரும் ஜூன் மாதம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரிவு பரந்து விரிந்ததாகவும் மேம்பட்ட வசதிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 53 நோயாளிகளையும் அவசரச் சிகிச்சைக் கண்காணிப்புப் பிரிவில் 55 நோயாளிகளையும் அனுமதிக்கும் அளவுக்கு அது பெரியது.

பழைய கட்டடத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 15 நோயாளிகளையும் கண்காணிப்புப் பிரிவில் 37 நோயாளிகளையும் மட்டுமே வைத்திருக்க இடவசதி இருந்தது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 1964ஆம் ஆண்டு 24 மணிநேர அவசரச் சிகிச்சைப் பிரிவு சிறிய அளவில் தொடங்கப்பட்டது. பின்னர் 1977ஆம் ஆண்டு அது புளோக் 1ல் பெரிதாக உருவெடுத்தது.

குறிப்புச் சொற்கள்