உள்ளூர்ப் பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பை வலுப்படுத்தி, அவசரகாலச் சூழ்நிலை ஏற்படும்போது பயணிகளைச் சிறப்பாகத் தயார்செய்யும் நோக்கில் அவசரகால ஆயத்தப் பயிற்சி நடைபெறவுள்ளது. இது டிசம்பர் 4ஆம் தேதி ஆர்ச்சர்ட் பெருவிரைவு ரயில் நிலையத்தில் நடைபெறும்.
நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இணைந்து இப்பயிற்சியினை நடத்தவுள்ளன.
எஸ்ஜி பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இப்பயிற்சி நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு-தெற்கு, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைகளில் அமைந்துள்ள ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில், அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். பயிற்சி நடைபெறும் நேரத்தில், உலோகக் கண்டுபிடிப்புக் கருவிகள், ஊடுகதிர்ச் சோதனைகள் வழியாகப் பயணிகள் அனுப்பப்படலாம்.
ரயில் நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைகளுக்காக அடையாளம் காணப்படும் பயணிகள், தங்களது சட்டைப்பைகளில் உள்ள பொருள்களை முழுமையாகக் காலி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், தங்களது உடைமைகளைக் கூடையில் வைத்துவிட்டு, பாதுகாப்புப் பணியாளர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதன்பின் அவர்கள் உலோகக் கண்டுபிடிப்புக் கருவி வழியாக நடந்துசென்று, பாதுகாப்புப் பணியாளர்களின் சோதனை முடிந்து அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்புச் சோதனைப் பணிகளுக்காகக் கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்னதாக, நவம்பர் 25ஆம் தேதி காலை எஸ்பிளனேட் பகுதியில் உள்துறைக் குழு அமைப்புகளும் சமூகப் பங்காளிகளும் இணைந்து வழக்கமாக நடத்தும் தனிப் பயங்கரவாத எதிர்ப்பு, அவசரகால ஆயத்தப் பயிற்சியைத் தொடர்ந்து இப்பயிற்சி நடைபெறுகிறது.
