சிங்கப்பூரின் நெருக்கடி நிர்வாகத்தையும் அவசரகால உளவியல் உதவிகளையும் மேம்படுத்த புதிய நடவடிக்கை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அது, உள்துறைக் குழுவின் உளவியல் நிபுணர்கள், சீர்திருத்த மறுவாழ்வு சிறப்பு அதிகாரிகள் ஆகியோரோடு மனநலச் சங்கங்களின் நிபுணர்களையும் ஓரணியில் திரட்டும்.
‘மனிதகுல அவசர உதவி, சமாளிப்புக் குழுக்களின் (Heart) நிபுணர் கட்டமைப்பு’ என்பது அந்தப் புதிய நடவடிக்கையின் பெயர்.
அந்த நடவடிக்கையை, சிங்கப்பூரில் புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்ற குற்றவியல் மற்றும் செயலாக்க உளவியல் ஆசிய மாநாட்டில் (Accop) உள்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தொடங்கி வைத்தார்.
“புதிய கட்டமைப்பு மனநலம் மற்றும் நெருக்கடி நிர்வாகத் துறைகளில் உள்ள அனைத்து அமைப்புகளின் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது. அத்துடன் அவற்றுக்கு இடையிலான அறிவாற்றல் பகிர்வையும் தலையீட்டு அணுகுமுறையையும் அது மேம்படுத்தும்,” என்றார் திருவாட்டி சிம்.
“அந்தப் பங்காளித்துவக் கூட்டணி, வெறும் உள்கட்டமைப்புடன் நின்றுவிடாமல், உணர்வு ரீதியான, உளவியல் ரீதியான சமாளிப்புத் திறன்களைப் பெற்று, வருங்கால அவசரநிலைகளுக்கு சிங்கப்பூரைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்த உதவும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
கட்டமைப்பில் இடம்பெறும் மனநலச் சங்கங்களின் பெயரையும் திருவாட்டி சிம் வெளியிட்டார்.
சிங்கப்பூர் மனநலச் சங்கம், சிங்கப்பூர் ஆலோசனைச் சங்கம், சிங்கப்பூர் உளவியல் சங்கம், சிங்கப்பூர் சமூகப் பணியாளர்கள் சங்கம் ஆகியன அவை.
தொடர்புடைய செய்திகள்
பயங்கரவாதத் தாக்குதல்களைச் சமாளிக்க சிங்கப்பூருக்கு உதவும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டமைப்பின் விரிவாக்கமே புதிய நடவடிக்கை.
பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த பின்னர் அளிக்கப்பட வேண்டிய உளவியல் உதவிகளுக்காக மருத்துவமனைகளும் பலதுறை மருந்தகங்களும் வளங்களைத் தேக்கி வைக்க அந்தக் கட்டமைப்பு உதவுகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையில் அறிவாற்றலையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ளவும் அது வழிவகுத்தது.

