சிங்கப்பூரின் மண்டாய் விலங்கியல் பூங்காவில் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) மாலை நேரத்தில் விலங்குப் பராமரிப்பு ஊழியர் ஒருவரை அங்கிருந்த தும்பிப் பன்றி கடித்துவிட்டது.
அன்றைய தினம் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்து விலங்கியல் தோட்டத்தை விட்டு வருகையாளர்கள் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் விலங்குகளை அவற்றின் தனிப்பட்ட கூண்டுகளில் ஊழியர்கள் அடைப்பது வழக்கம்.
அந்த நேரத்தில் தும்பிப்பன்றி ஊழியரைக் கடித்துவிட்டது என்று மண்டாய் வனவிலங்குக் குழுமப் பேச்சாளர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விளக்கினார்.
கடிபட்ட ஊழியருடன் அப்போது உடன் இருந்த இரண்டாவது பராமரிப்பு ஊழியர் உடனடியாக தலையிட்டு அந்த விலங்கைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். பிறகு அது அதன் கூண்டுக்குள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டது.
ஊழியரைக் கடித்த பெண் தும்பிப்பன்றிக்கு தற்போது 23 வயது எனவும் அதனைத் தாம் தொடர்ந்து பராமரித்து வருவதாகவும் மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்தது.
கடிபட்ட ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குணமடைந்து வரும் அவருக்கு அனைத்து ஆதரவும் வழங்க அவரின் குடும்பத்துடன் குழுமம் தொடர்பில் இருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறினார்.
‘தபிர்’ என்றழைக்கப்படும் தும்பிப்பன்றிகள் பொதுவாக தனிமையை விரும்புபவை. யாரையும் அவை தாக்குவது கிடையாது என்றாலும் இதுபோன்ற சம்வபங்கள் நிகழ்வது அரிது எனவும் அவர் விவரித்தார்.
ஊழியரைக் கடித்த தும்பிப்பன்றி, மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பராமரிப்பில் பிறந்த விலங்காகும். அதன் காப்பாளர்கள் அதன் வாழ்நாள் முழுவதும் அணுக்கமாக அதனுடன் பழகிவந்துள்ளனர். அது கருவுற்றதிலிருந்து அதன் குட்டியை ஈன்றெடுக்கும் வரை அவர்கள் அதனைப் பராமரித்துள்ளனர்.
குழுமத்தில் பணியாற்றும் விலங்குகள் பராமரிப்புக் குழு அவற்றுடன் வலுவான உறவை ஏற்படுத்தி உயர்தர சேவையை வழங்குவதாகவும் அப்பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
விலங்குகள் பராமரிப்பாளர்களை அடையாளம் காண முடிந்தாலும் எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்படுத்தும் வகையில் அவை நடந்துகொள்ளும் வாய்ப்புள்ளதை இவைபோன்ற விபத்துகள் உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
ஆசியாவில் மட்டும் காணப்படும் இவ்வகை தபிர் இன தும்பிப்பன்றிகளின் எண்ணிக்கை உலகில் குறைந்துவருவதால் அவற்றை அரியவை என்று அனைத்துலக இயற்கைப் பராமரிப்பு ஒன்றியம் வகைப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் சம்பவத்துக்குப் பிறகு, ஊழியர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்பை மேம்படுத்த குழுமம் அதன் செயல்முறைகளை மறுஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தது.


